பிரிக்ஸ் அமைப்பில் இணையவுள்ள இலங்கை : ரணிலின் முடிவை ஏற்றுக்கொண்ட அநுர
ரஷ்யாவில் (Russia) நடைபெறவுள்ள பிரிக்ஸ் (Brics) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன (Aruni Wijewardane) தலைமையிலான குழு கசான் நகருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்திருந்த ரணில் (Ranil Wickremesinghe) அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு புதிய ஜனாதிபதி அநுரவும் (Anura Kumara Dissanayake) விருப்பத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த விஜயத்தின் மூலம் பிரிக்ஸ் பொருளாதார கூட்டமைப்பில் இலங்கையின் உறுப்புரிமை தொடரப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தியா அழைப்பு
ரஷ்யாவின் கசான் நகரில் எதிர்வரும் 22ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நடப்பு ஆண்டின் தலைமைத்துவத்தை வகிக்கும் இந்தியா (India) இலங்கைக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த அழைப்புக்கு சாதகமாக பதிலளித்துள்ள வெளிவிவகார அமைச்சு, பிரிக்ஸ் அமைப்பில் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் அண்மைய கொழும்பு விஜயத்தின்போது, இலங்கையின் பிரிக்ஸ் உறுப்புரிமை அபிலாஷைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்ட சந்திப்புகளின்போது கலந்துரையாடி இருந்தார்.
சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற முக்கிய உலகப் பொருளாதாரங்களை உள்ளடக்கிய அமைப்பில் இணைவதற்கான நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்திருந்த ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் தீர்மானத்தின் பிரகாரம் பிரிக்ஸ் அமைப்பில் இணையும் விருப்பத்தை ஜனாதிபதி அநுரவும் இதன்போது வெளிப்படுத்தியிருந்தார்.
பிரிக்ஸ் அமைப்பு
இதற்கமைவாகவே இலங்கை பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 20ஆம் திகதி ரஷ்யாவிற்கு செல்லவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் வளர்ந்து வரும் சந்தை நாடுகளின் ஒரு முக்கிய அரசுகளுக்கிடையேயான அமைப்பாகவே பிரிக்ஸ் காணப்படுகிறது.
பிரிக்ஸ் அமைப்பு ஆரம்பத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்காவை உள்ளடக்கியதாக இருந்த நிலையில் இதனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் புதிய உறுப்பினர்களாக இலங்கை, ஈரான், எகிப்து, எதியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை இந்த ஆண்டில் இணைத்துக்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், பிரிக்ஸ் அமைப்பில் இலங்கையின் உறுப்புரிமையானது சாத்தியமான உள்ளடக்கமாக முக்கிய உலக நாடுகளுடன் அதன் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்துவதற்கும் சர்வதேச பொருளாதார தளங்களில் மேலும் ஒருங்கிணையவும் சிறந்த வாய்ப்பாகவும் அமையும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |