பொது நிதியை கோடிக்கணக்கில் வீண் விரயம் செய்யும் மன்னார் நகரசபை - ஆதாரங்களுடன் வெளியான தகவல்!
பொது நிதி மற்றும் சொத்துக்கள், அரசாங்க பிரதிநிதிகளின் முறையற்ற கையாள்கைகளால் நட்டத்தை ஏற்படுத்துகின்றமை அம்பலமாகியுள்ளது.
மன்னார் நகர சபையின் செலவீனங்கள் தொடர்பில், ஐ.பி.சி தமிழின் பிராந்திய செய்தியாளர் ஜோசப் நயன் நடத்திய ஆய்வில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.
இதன்படி மன்னார் நகர சபைக்கு சொந்தமான வாகனங்களுக்கு மாதாந்தம் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கடந்த 05 வருடங்களில் இதற்காக 2 கோடியே ஐந்து இலட்சம் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மன்னார் நகர சபைக்கு சொந்தமான வாகனங்கள் அனைத்தும், கடந்த 60 மாதங்களில் 10 மாதங்கள் தவிர ஏனைய 50 மாதங்களும் பழுதுபார்த்தலுக்காக செலவழிக்கப்பட்டுள்ளமை நகர சபையின் “தகவல் அறியும் உரிமைச் சட்டம்” மூலம் பெற்றப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவிசாளரின் வாகனத்திற்கு மாத்திரம் செலவான தொகை
அதிலும் வருடாந்தம் சராசரியாக, 6 இலட்சத்துக்கு குறையாத அளவிற்கு செலவீனம் செய்யப்பட்டுள்ளதாக தரவுகளில் பதிவிடப்பட்டுள்ளது. குறிப்பாக மன்னார் மாநகர சபைின் தவிசாளரின் வாகனத்திற்கு மாத்திரம் 5 வருடங்களில் 41 இலட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மன்னார் மாவட்ட செயலக வாகனம் மற்றும் நகரசபை வாகனங்கள் இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு, எமது பிராந்திய செய்தியாளர் ஜோசப் நயன் , தரவுகளை முன்வைக்கின்றார்.
குறிப்பாக மன்னார் மாவட்ட செயலகம் மற்றும் அதன்கீழுள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி காணப்படும் 16 வாகனங்கள் 2002 சதுரகிலோ மீற்றர் பகுதியில் பயணங்களில் ஈடுபடுகின்ற நிலையில், அவற்றிற்கு கடந்த 05 ஆண்டுகளில் ஒருகோடியே தொண்ணூறு இலட்சம் ரூபாய்கள் பழுதுபார்த்தலுக்காக செலவிடப்பட்டுள்ளன.
அதேநேரம், 27.89 சதுரகிலோமீற்றர் பகுதியில் பயணங்களை மேற்கொள்ளும் மன்னார் நகர சபையின் கீழ் இருக்கும் 12 வாகனங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரண்டு கோடியே 6 இலட்சம் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளன.
இந்த இரு கட்டமைப்புக்களின் கீழ் பயன்பாட்டுக்காக காணப்படும் வாகனங்களின் திருத்தச் செலவுகளை உற்று நோக்குகின்றபோது யதார்த்ததிற்கு புறம்பானதொரு நிலைமை காணப்படுவதாக செய்தியாளர் தெரிவித்தார்.
சந்தேகத்திற்குள்ளான செயற்பாடு
ஓரிரு வருடங்களுக்கு மாத்திரமன்றி தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாக இந்த நிலைமை நீடிக்கின்றமையானது, பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
பழுபார்த்தலுக்கான செலவீனங்கள் மேற்கொள்ளப்பட்ட கடந்த ஐந்து வருட காலப்பகுதிக்குள் கொரோனா தொற்றுப்பரவலால் நாடு முழுமையாக முடங்கிய ஓராண்டும் உள்ளடங்குகின்றமை மேலும் சந்தேகங்களை வலுப்படுத்துகின்றது.
மன்னார் மாவட்ட செயலளாரின் வாகனமானது 2017 தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரையான ஐந்தாண்டுகளில் 100க்கு மேற்பட்ட தடவைகள் அரச சேவைக்கு என வெளிமாவட்டத்திற்குச் சென்றுள்ளது.
ஆனால் மன்னார் நகரசபையில் தவிசாளர் பயன்படுத்தும் லாண்ட் குரோஸர் வாகனமானது 49 தடவைகள் மாத்திரமே மாவட்ட எல்லையைத் தாண்டிப் பயணித்துள்ளதுடன் அதில் 6 தடவைகள் தவிசாளரின் சொந்த தேவைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் திருத்தப் பணிகளுக்கு நகரசபை தவிசாளரின் வாகனத்திற்கே அதிகளவில் செலவிடப்பட்டுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் நகரசபை தவிசாளரின் வாகனங்கள் ஒரே ஆண்டிலேயே கொள்வனவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
திருத்த வேலைக்கு மட்டும் பல இலட்சங்கள் செலவு
இதன்படி மாவட்ட செயலாளரின் வாகனத்திற்கு 28 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ள நிலையில், நகரசபைத் தவிசாளரின் வாகனத்திற்கு சுமார் 41 இலட்சம் ரூபா பழுதுபார்த்தலுக்காக செலவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மன்னார் நகர சபையில் மாவட்ட செயலகத்தினை விடவும் வாகன பழுதுபார்த்தல் செலவீனம் அதிகரித்து காணப்படுவது தொடர்பில் நகரசபை தவிசாளர் ஞானபிரகாசம் அன்ரனி டேவிசனை தொடர்பு கொண்டு கேட்டபோது,
தன்னுடைய பராமரிப்பில் காணப்படும் லாண்ட்குரோஸர் வாகனம் ஜப்பான் நாட்டு உற்பத்தி என்பதனால் அவ்வாகனத்தின் உதிரிபாகங்களுக்கான திருத்த செலவீனம் அதிகமாக காணப்படுவதாகவும் குறித்த வாகனம் UNDPயினால் 6 வருடங்கள் பயன்படுத்தப்பட்டு மன்னார் நகரசபையிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
நகரசபை வாகனத்தை 12 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்துவதால் அதிக செலவீனத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். 2018 ஆம் ஆண்டு மூன்று புதிய வாகனங்களுக்கான கொள்வனவிற்கு நிதி ஒதுக்கப்பட்ட போதிலும் திறைசேரியினால் புதிய வாகனங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டதால் பழைய வாகனங்கள் என்ற ரீதியில் திருத்தத்திற்காக ஆண்டு தோறும் பணம் விரயமாவதாக அவர் பதிலளித்துள்ளார்.
அழிக்கப்பட வேண்டிய வாகனங்களுக்கும் வீண் செலவீனம்
எனினும் ஜப்பான் நாட்டு உற்பத்தியான மாவட்ட அரசாங்க அதிபரின் வாகனமும் 15 வருடங்கள் பாவனையில் காணப்படுகின்ற போதும், நகரசபை தவிசாளரின் வாகனத்திற்கான செலவீனத்திற்கு இடையில் சுமார் 12 இலட்சம் அதிகரித்து காணப்படுகின்றது.
உள்ளூர் ஆட்சி அமைப்புக்களின் கீழ் காணப்படும் பெரும்பாலான வாகனங்கள் அழிக்கப்பட வேண்டிய நிலையில் காணப்படுவதாகவும் அவற்றை அழிக்காது பயன்பாட்டில் வைத்திருப்பதன் காரணமாகவே இவ்வாறான வீண் விரய செலவுகள் இடம்பெறுவதாகவும் வாகன பயன்பாடு தொடர்பான தொழில்நுட்ப பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் பயன்படுத்த முடியாமல் உள்ள வாகனங்களை திருத்த வேலைக்கு அனுமதிப்பதை தவிர்த்து அதற்கு பதிலாக வாகனங்களை வாடகைக்கு அமர்த்துவது பெரும்பாலும் செலவுகளை கட்டுப்படுத்தும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
எனினும் உள்ளூராட்சி கட்டமைப்புக்கள் மற்றும் அரச கட்டமைப்புக்களின் கீழ் காணப்படும் வாகனங்களை GPS தொழில்நுட்பத்தின் ஊடாக இணைப்பதன் மூலம் சட்ட அனுமதி அற்ற பயணங்களால் ஏற்படும் வீண் செலவுகள் தவிர்க்கப்படும் என மாவட்ட செயலகத்துடன் பணியாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதுவரை மாவட்ட அனர்த்த முகாமைதுவ பிரிவு வாகனங்கள் மாத்திரமே GPS தொழில் நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து வருடத்தில் நகரசபையின் கீழ் உள்ள ஏனைய வாகனங்களான ஜே.சி.பி, ரோட் ரோலர், உந்துருளிகள் ஆகியவற்றைப் பழுதுபார்ப்பதற்காக அறுபத்தைந்து இலட்சத்து நான்காயிரம் ரூபாவும் நீர் வழங்கல் வாகனத்திற்காக பதினொரு இலட்சத்து ஏழாயிரம் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளன.
ஆண்டு செலவுகளை அரச திணைக்களங்கள் வெளிப்படுத்த வேண்டும்
ஒட்டு மொத்தமாக மன்னார் நகர சபையின் கீழ் காணப்படும் 12 வாகனங்களுக்கான பழுதுபார்த்தல் செலவீனமாக கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு கோடியே ஐந்து லட்சத்து நாற்பத்தொன்பதாயிரத்து ஐநூற்று ஏழு ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இனிவரும் காலங்களில் ஆண்டு தோறும் இவ்வாறான செலவுகளை நகரசபை மாத்திரம் இல்லாமல் ஒவ்வொரு அரச திணைக்களங்களும் பொது வெளியில் மக்களுக்கு வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும் என பொது அமைப்புக்கள் வலியுறுத்துகின்றன.
எனினும் இந்த விடயம் தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் நகரசபை அலுவலகத்தில் தகவல்களை தெரிந்து கொள்ளுமாறும் உப தவிசாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் பயன்பாட்டுக்கு பொருத்தமற்ற வாகனங்களை பயன்படுத்துவதாலும், வீண்விரய பயணங்களை மேற்கொள்வதாலும், அரச வாகனங்களை சொந்த வேலைக்காக பயன்படுத்துவதாலும் மக்களுக்காக பயன்படுத்த வேண்டிய பாரிய நிதி தொடர்சியாக திருத்த செலவுக்காக செலவாகின்றது.
எனவே பயன்பாட்டுக்கு உதவாத வாகனங்களுக்கான திருத்த செலவுகள் தவிர்க்கப்படவேண்டும் என்பதுடன் அரச வாகனங்கள் சொந்த பாவனைக்கு பயன்படுத்தப்படுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
மாற்று வழிகளை நடைமுறைப்படுத்துவதனால் வீண் செலவீனம் கட்டுப்படுத்தப்படும் என்பதுடன் மக்களுக்கான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அந்த நிதியை பயன்படுத்த முடியும் என ஜோசப் நயன் சுட்டிக்காட்டியுள்ளார்.




