மஹிந்தவின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான செயலாளர் பதவி நீக்கப்பட்டாரா?
சிறிலங்காவின் பிரபல அரசியல் தலைவர் ஒருவரின் நாடாளுமன்ற விவகார செயலாளராக கடமையாற்றிய ஒருவர், அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் நிதி மோசடி செய்தமையாலேயே, அந்த பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவின் நாடாளுமன்ற விவகார செயலாளராக கடமையாற்றும் உதித் லொக்கு பண்டாரவையே பதவி நீக்கம் செய்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவர், அரசியல் தலைவரின் பணம் மீளபெறும் அட்டையை பயன்படுத்தி, வங்கிக் கணக்கில் இருந்து நீண்டகாலமாக பணத்தை பெற்றுக்கொண்டுள்ளமை தெரியவந்ததை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பதவி நீக்கப்பட்ட நபரை பிரபல அரசியல் தலைவர் “முட்டாள் பேய்” என ஒரு முறை பகிரங்கமாக திட்டியிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த காலத்தில், உதித் லொக்கு பண்டாரவை மகிந்த ராஜபக்ச ஒரு முறை ஊடகங்களுக்கு முன்னால் பகிரங்கமாக திட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
உதித் லொக்குபண்டார, முன்னாள் சபாநாயகர் டப்ளியூ.ஜே.எம். லொக்குபண்டாரவின் புதல்வராவார்.
இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ள உதித் லொக்கு பண்டார பிரதமரின் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான செயலாளராக, கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றிற்கு தெரிவான உதித் லொக்குபண்டார, 2015ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
அமைச்சுக்களின் ஆலோசனை குழுக்கள் பலவற்றில் பிரதிநிதியாக செயற்பட்ட உதித் லொக்குபண்டார, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினராகவும் சிறிது காலம் பணியாற்றினார்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் கல்வி பயின்ற இவர், லண்டன் வர்த்தக சபையில் சந்தைப்படுத்தல் டிப்ளோமா மற்றும் பட்டய சந்தைப்படுத்தல் முகாமைத்துவ நிபுணராகவும் செயற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
