தமிழர் தாயகப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் மற்றும் பிள்ளையார் சிலைகளுடன் மாயமான இராணுவ முகாம்!
முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்த இராணுவ முகாம் ஒன்று திடீரென முற்றாக அகற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மிக நீண்ட காலமாக அங்கு முகாம் அமைத்து இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த நிலையிலேயே தற்போது இண்மை நாட்களாக அப்பகுதியில் இராணுவ முகாம் முற்றாக அகற்றப்பட்டு வெற்றுக்காணியாக காணப்படுகின்றது.
இதேவேளை இப்பகுதியில் படையினர் தங்கியிருந்த போது, அந்தப் பகுதியில் அமைந்துள்ள அரசமரத்தின் கீழ் புத்தர் சிலை மற்றும் பிள்ளையார் சிலை என்பன வைக்கப்பட்டு வழிபாடுகளையும் மேற்கொண்டு வந்துள்ளார்கள்.
படைமுகாம் அகற்றல்
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் மணவாளன் பட்டமுறிப்பு பகுதியில் நிலைகொண்டிருந்த படையினரின் முகாமே முற்றாக அகற்றப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக வீதி கண்காணிப்பு மற்றும் பிரதேசத்தின் கண்காணிப்புக்காக அமையப்பெற்ற படை முகாம் கடந்த வாரத்திலிருந்து முற்றாக அகற்றப்பட்டுள்ளது
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, கடந்த 2012 ஆம் ஆண்டு மக்கள் மீள்குடியேற்றபட்டனர். அன்றிலிருந்து, குறித்த பகுதி, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணி என அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.
அந்த காணியிலேயே, சிறிலங்கா இராணுவத்தினர் படைமுகாம் அமைத்து கண்காணிப்பு பணிகளை முன்னெடுத்து வந்துள்ளார்கள். இவ்வாறான நிலையிலேயே அண்மை நாட்களாக எவ்வித கட்டிடங்களோ, அவர்கள் வழிபட்ட புத்தர், பிள்ளையார் சிலைகளையோ காணமுடியாமையுள்ளது.