முள்ளிவாய்க்கால் மண்ணில் கதறியழும் தமிழ் மக்கள்! நேரலை
இலங்கையில் இடம்பெற்ற 30 வருடகால போர் மே18 இல் மிகவும் கொடூரமாக முடிவடைந்த நாள் இன்றாகும்.
முள்ளிவாய்க்கால் என்பது ஈழத் தமிழினத்தின் இனப்படுகொலையின் குறியீடு. மனித குலத்திற்கெதிரான மிகப் பெரும் இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்து இன்றுடன் 13 வருடங்கள் ஆகிறது.
தமிழர் தேசத்தின் மைந்தர்கள் நிகழ்த்திய தனிச்சமர் தமிழர்களின் விடுதலை தாகத்திற்கு தக்கசான்றாகும்.
தமிழீழம் என்கின்ற தணியாத இலட்சியத்திற்காக எத்தனை கொடிய துன்பங்களையும், சுமக்கத் தயாராகிய மக்களின் அவலம் தோய்ந்த முள்ளிவாக்கால் வாழ்வை யாராலும் மறக்க முடியாது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் குறுகிய நிலப்பரப்பில் உயிரைக்காத்துக்கொள்வதற்காக தஞ்சமடைந்திருந்த நிலையில், சிறிலங்கா இராணுவத்தின் கண்மூடித்தனமான கொத்துக் குண்டுத்தாக்குதலில் உடல் சிதறிப் பலியானோர், அங்கவீனர்களாக்கப்பட்டமை என சொல்லொணாத் துயரங்களை தசாப்த காலங்கள் கடந்தும் தமிழ் மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் புலனாய்வாளர்கள், காவல்துறையினர் மற்றும் படையினர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சூழ்ந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கடந்த இரண்டு வருடங்களாக சரியான முறையில் அஞ்சலி செலுத்த முடியாது நீதிமன்ற தடை உத்தரவுகளை காவல்துறையினர் பெற்று தடுத்து வந்தனர். இருப்பினும் தடைகளை மீறி குறிப்பிட்ட சிலரால் தொடர்ச்சியாக அஞ்சலி செலுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
