இனப்படுகொலையை நினைவு கூறும் முள்ளிவாய்கால் கஞ்சி! - ஆரம்பமானது தமிழர் தாயகத்தில்(காணொளி)
கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடிய காலகட்டத்தில் மக்கள் பாரிய உணவு நெருக்கடிக்கு முகம் கொடுத்திருந்தனர்.
அந்த மக்கள் உணவுத் தேவைக்காக பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்த நிலையில் முள்ளிவாய்க்காலில் அவர்களது பசி போக்கியது முள்ளிவாய்க்காலில் வழங்கப்பட்ட கஞ்சியே.
2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தமிழர்களுக்கான நீதி மறுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று 13 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும் எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நினைவேந்தல் முன்னெடுக்கப்பட இருக்கின்றன.
அந்த வகையிலே இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மக்கள் உணவின்றி அல்லல்ப்பட்ட போது தமிழர் புணர்வாழ்வுக் கழகத்தினால் கஞ்சி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இந்த கஞ்சியை பெற்றுக்கொள்வதற்காக பசியில் தவித்த மக்கள் சென்று வரிசையில் நின்ற போது அங்கும் இராணுவத்தினரின் தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட வரலாற்றுச் சம்பவங்களும் உண்டு.
இவ்வாறான நிலையிலேயே இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் முடங்கி இருந்த காலப்பகுதியிலே அவர்களுடைய உணவான கஞ்சியின் வரலாற்றினை அல்லது அவர்களுக்கு அந்த காலப்பகுதியில் பசியாற்றிய இந்த கஞ்சியினை வரும் சந்ததியினருக்கும் தெரிவிக்கும் முகமாக தமிழின அழிப்பு வாரத்தின் ஆரம்ப நாளான இன்றைய நாளில் இருந்து எதிர்வரும் 18ஆம் திகதி வரை இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்குவதற்கு வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கமும் பொது அமைப்புகளும் இணைந்து வேலைத்திட்டமொன்றினை வடகிழக்கெங்கும் முன்னெடுக்கின்றனர்.
அந்த வகையிலே இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வு இன்று காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் முள்ளிவாய்க்கால் பொதுச்சந்தை வளாகத்திற்கு அருகில் வழங்கி வைக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பொது அமைப்புகள் இணைந்து முன்னெடுக்கும் இந்த கஞ்சி வழங்கும் திட்டமானது எதிர்வரும் நாட்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட உள்ளதோடு தமிழ் மக்கள் உணவு தட்டுப்பாட்டை எதிர்நோக்கிய போது இந்த கஞ்சி மட்டுமே அவர்களுக்கு வாழ்வளித்தது.
எதிர்கால சந்ததிகளுக்கு கடத்தும் முகமாக கஞ்சி பற்றிய துண்டுப்பிரசுரங்களை வழங்கி இந்த கஞ்சி வழங்கும் நிகழ்வினை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த செயல் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறுகின்ற 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இந்த கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[
இதேவேளை உறவுகள் கஞ்சி தயாரிக்க ஆரம்பித்த நேரத்தில் இருந்து குறித்த பகுதியில் அதிகளவான புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.














