முல்லைத்தீவில் கடற்படை மற்றும் காவல்துறை அடாவடி- ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்!
முல்லைத்தீவு வட்டுவாகல் கடற்படை தளத்துக்காக தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிப்பதற்காக அளவீட்டுப் பணிகள் இடம்பெறவிருந்தது.
இந்த செயற்பாடு இன்றைய தினம் இடம்பெறவிருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்களான மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் முல்லைத்தீவு வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் முன்பாக போராட்டம் மேற்கொண்டிருந்தனர்.
ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்
அதன் போது செய்தி அறிக்கையிடுவதற்காக சென்றிருந்த ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனின் கடமைக்கு முல்லைத்தீவு காவல்துறையினர் மற்றும் புலனாய்வாளர்களால் இடையூறு மேற்கொள்ளப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் போராட்டம் மேற்கொண்ட இடத்தில கடமையில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளரை கடற்படை அதிகாரி இங்கு புகைப்படம் எடுக்கமுடியாது என அச்சுறுத்தியதோடு காவல்துறையினரை அழைத்து இவரது ஊடக அடையாள அட்டைய பரிசோதியுங்கள் என கட்டளையிட்டதோடு இவரை கைது செய்யுமாறும் பணித்தார் .
காவல்துறையின் அடாவடி
இதனால் அப்பகுதியில் கடமையில் இருந்த இரண்டு காவல்துறையினர் ஊடகவியலாளரை தடுத்து வைத்திருந்து ஊடக அடையாள அட்டையை காண்பிக்குமாறு வற்புறுத்தியதோடு கைத்தொலைபேசியில் ஊடக அடையாள அட்டையை புகைப்படம் எடுத்துள்ளனர்.
அதன் போது சிவில் உடை தரித்த ஒருவர் காவல்துறை முன்பாகவே ஊடகவியலாளரை இலக்குவைத்து அச்சுறுத்தும் பாணியில் நெருங்கி வந்து கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்துவிட்டு EP BGJ 0353 என்ற இலக்கத் தகடுடைய மோட்டார் சைக்கிளில் அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளார்.
கைது செய்யும் முயற்சி
இதேவேளை கடற்படையினரோடு இணைந்து சிவில் உடையில் நின்ற சிலர் போராட்டக்காரர்களையும் ஊடகவியலார்களையும் புகைப்படம் எடுத்த போதிலும் காவல்துறையினர் அவர்கள் தொடர்பில் எந்தவிதமான விசாரணையிலும் ஈடுபடவில்லை.
மாறாக கடமையில் இருந்த ஊடகவியலாளரை கைது செய்யும் பாணியில் பிடித்து தடுத்து வைத்ததோடு புகைபடம் எடுத்தும் வாக்குவாதத்தில் ஈடுபடும் கடமைக்கு இடையூறை ஏற்படுத்தி அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.




