இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட இந்து ஆலய வளாகம் - காலக்கெடு விதித்துள்ள மக்கள்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலயத்தின் தீர்ந்த வீதி மற்றும் பரியழம் விடும் இடம் என்பவற்றை இராணுவத்தினரிடமிருந்து விடுவித்து தருமாறு கோரி, ஆலய நிர்வாகத்தினரால் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
“ஆலத்தின் தீர்ந்த வீதி பரியழம் விடும் இடம் விடுவித்தல்” தொடர்பானது எனும் தலைப்பில் அரசாங்க அதிபரிடம் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எமது ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வின் முதல் நிகழ்வாக தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இடம்பெறுவதற்கான வீதியானது இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
தீர்த்த உற்சவத்திற்கு இராணுவத்தால் வீதித்தடை
ஆகவே ஆலயத்தின் தீர்த்த வீதியூடாக செல்ல இராணுவம் தடைவிதித்துள்ள பட்சத்தில், வேறு பாதை ஊடாக சென்று தீர்த்தம் எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இதன் காரணமாக சில அசாதாரண நிகழ்வுகளும் இடம்பெற்றமையும் உண்மையான ஒன்றாகும். தொடர்ந்து பரியழம் வழிவிடும் இடமானது தூண்கள் அமைக்கப்பட்டு இரும்பினால் கதவும் அமைப்பட்டிருந்தது.
பாதுகாப்பு தூண்களை அடித்து உடைத்த இராணுவம்
இது இராணுவமும் கிராம மக்களும் அறிந்த ஒரு விடயமாகும். இப்போது அவ்இடத்தில் போடப்பட்டிருந்த தூண் இராணுவத்தினால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
ஆலய நிர்வாகமாகிய நாங்கள் தங்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் எமது ஆலய சம்பிர்தாயங்களுக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு இடங்களையும் இராணுவத்திடமிருந்து மீட்டு தருமாறு மிகவும் பணிவாக கேட்டுக்கொள்கிறோம்.
மக்கள் வழங்கிய காலக்கெடு
எமக்கான பதில் மூன்று நாட்களுக்குள் கிடைக்காத பட்சத்தில் பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவுள்ளோம் என்பதனையும் அறியத்தருகின்றோம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



