வானத்தில் இருந்து விழும் விசித்திர பொருள்: பதற்றத்தில் மக்கள்
இலங்கையின் சில பகுதிகளில் இரண்டு நாட்களாக வானத்தில் இருந்து விழும் ஒரு வித்தியாசமான மர்மப் பொருளினால் மக்கள் மத்தியில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த சிலந்தி வலை போன்ற வெள்ளை நிற மர்மப்பொருள் பொலன்னறுவை, திம்புலாகலை, வெலிகந்த, மகாவலி போன்ற பிரதேசங்களில் கடந்த இரு நாட்களாக காலையில் விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்தோடு, அவற்றை ஒரு சிலவற்றை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மர்மப் பொருள்
இந்நிலையில், இந்த மர்மப் பொருளினால் நேற்றுமுன் தினம் பொலன்னறுவை, ஜயந்திபுர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நேற்று காலை திம்புலாகல, நுவரகல, யக்வெவ, யக்குரே, மனம்பிட்டிய, சிறிபுர போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், வெலிகந்த நெலும்வெவ, மதுரங்கல உள்ளிட்ட அண்டை கிராமங்களிலும் இந்த வெள்ளைப் பொருட்கள் விழுவதை மக்கள் அவதானித்துள்ளனர்.
மேலும், இவை காலை வேளையில் பொலன்னறுவை பிரதேசத்தில் பெருமளவில் விழுவதுடன், அப்பகுதியில் உள்ள மின் கம்பிகள் மற்றும் செடிகளில் சிக்கி இருப்பதை மக்கள் பார்த்துள்ளனர்.
ஆனால், இந்த வெள்ளைப் பொருட்கள் சில நொடிகளில் கரைந்துவிடும் என பொலன்னறுவை உள்ளிட்ட அண்டை கிராமங்களில் உள்ள விவசாயிகள் கூறியுள்ளனர்.