இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு எம்மை அசைக்க முடியாது!
அரசாங்கத்தை வீழத்தவோ, கலைக்கவோ முடியாது எனத் தெரிந்தும் சிறிலங்காவின் எதிர்க்கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதாக சிறிலங்கா அமைச்சர் நாமல் ராஜபக்ச(Namal Rajabaksha) தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை அமைத்து இரண்டரை வருடங்களுக்குள் ஆட்சியை கலைக்க முடியாது என சட்டமே சொல்கின்ற நிலையில், எதிர்க்கட்சி போராட்டங்களை முன்னெடுத்து கொரோனா தொற்று நான்காம் அலை ஏற்படுவதை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவத்த அவர்,
வீதிகளில் எத்தனை ஆர்ப்பாட்டங்களை செய்தாலும் , தீர்மானங்களை எடுப்பது நாடாளுமன்றம் என்றால் நாடாளுமன்றில் அது தொடர்பில் பேசுங்கள்.
இந்த அரசாங்கத்தை இரண்டரை வருடங்களுக்குள் வீழ்த்த முடியாது. கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு இன்றுடன் 2 வருடங்கள் நிறைவடைகின்றது. இன்னும் ஒன்றரை வருடங்கள் வரை அவர்களே கொண்டு வந்த அரசியிலமைப்பின் படி அரசாங்கத்தை எப்படியும் கலைக்க முடியாது.
கடந்த காலங்களில் ஒரு வருடத்தில் அரசாங்கத்தை கலைக்க அரச தலைவருக்கு முடியும். அந்த முறையை நல்லாட்சி அரசாங்கம் 5 வருடங்களாக்கியது. பின்னர் எமது அரசாங்கத்தில் அதனை இரண்டரை வருடங்களாக மாற்றியமைத்தோம்.
அப்படியென்றால் அரசாங்கத்தை வீழ்த்த முடியாவிட்டால் ஏன் வீதிக்கு இறங்கி கொரோனாவை பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். இந்த ஆர்ப்பாட்டங்களின் இறுதி பிரதிபலன் என்ன? இந்த ஆர்ப்பாட்டங்களின் இறுதி பிரதிபலன் தான் கொரோனா 4ஆவது அலையை உருவாக்குவது. வேறு எந்த காரணமும் இல்லை எனத் தெரிவித்தார்.