ரணிலின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் - காத்திருக்கும் பேராபத்து..!
புதிதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத தடை சட்டமூலத்தை அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடித்தே ஆக வேண்டும் என தமிழ் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதிபர் சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், இம்மாதம் நாடாளுமன்றத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பயங்கரவாத சட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற பெயருடன் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த நிலையில் தற்போது தெற்கில் வாழும் மக்களும் குறித்த சட்டத்தினால் அடக்கப்பட்டு வருகின்றனர்.
ஆபத்தான புதிய சட்டம்
கடந்த வருடம் பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்க வேண்டும் எனக் கோரி பருத்தித்துறை முனையில் இருந்து தெய்வேந்திர முனைவரை பேரணியாக நாம் சென்றோம். எமது பேரணி இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களையும் ஊடறுத்துச் சென்ற நிலையில் எந்த ஒரு பகுதியிலும் எமது பேரணிக்கு எதிர்ப்புக்கள் எழவில்லை.
இந்த நாட்டினுடைய மக்கள் பெரும்பாலானவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள நிலையில் தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகிறோம் என கூறி ஆபத்தான புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை நிறைவேற்றுவதற்கு முனைகிறது.
குறித்த சட்டமூலத்தை ஏப்ரல் மாத நடுப்பகுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன அண்மையில் அறிவித்துள்ள நிலையில் குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும்.
அதற்கான அழுத்தங்களை வழங்குவதற்கு இன மத மொழிகளுக்கு அப்பால் சென்று மக்கள் பேரழிச்சியுடன் போராட்டங்கள் இடம்பெற வேண்டும்.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டால் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஊடக நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் சுயாதீன அமைப்புக்கள் என அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.
தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் வரையறை இல்லாத நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு ஜனநாயக வழியில் போராடுபவர்களை கட்டுப்படுத்துவதற்கான வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நீதி அமைச்சர் குறித்த சட்டமூலத்தை தெளிவு படுத்துவதற்கு நீதிமன்றம் செல்வோம் என்கிறார் நீதிமன்றம் அரசியல் அமைப்பு உட்பட்டே வியாக்கியானங்களை முன்வைக்கும் நாங்கள் குறித்த சட்டமூலத்தை தோற்படிப்பதற்கு சிங்கள புத்திஜீவிகள் தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து பாரிய ஒரு போராட்டத்தை நடத்தவுள்ளோம் ஆகவே ஆபத்துக்கள் நிறைந்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தோற்கடிப்பதற்கு இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் பேர் எழுச்சியாக வீதியில் இறங்கினால் தோற்கடிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.