இலங்கை – பாகிஸ்தான் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கை (Sri Lanka) நாடாளுமன்றத்திற்கும் மற்றும் பாகிஸ்தான் (Pakistan) நாடாளுமன்ற சேவைகள் நிறுவகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த கைச்சாத்திடல் நிகழ்வானது, நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளை வளர்ப்பதற்கும் மற்றும் சட்டவாக்க நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற சேவைகள்
அத்தோடு, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் நாடாளுமன்ற சேவைகள் நிறுவகம் சார்பில் பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ், இலங்கை நாடாளுமன்றம் சார்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
அத்தோடு, குறித்த நிகழ்வில் பாகிஸ்தானின் பிரதி உயர்ஸ்தானிகர் வாஜித் ஹஸன் ஹஷ்மி மற்றும் நாடாளுமன்றத்தின் பிரதான ஒழுங்கு மரபு உத்தியோகத்தர் அமா விதானகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற பணியாளர்களுக்கிடையில் அறிவைப் பகிர்ந்துகொள்ளும் செயற்பாடுகள் ஊடாக நாடாளுமன்ற ஜனநாயக விழுமியங்களை ஊக்குவித்தல் மற்றும் சட்டவாக்க நடைமுறைகளை வலுப்படுத்தல் என்பன இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் மற்றும் ஒப்பந்தத்தை கையொப்பமிட்டதன் பின்னர் அதனை உயிர்ப்புடனும் செயற்பாட்டு ரீதியான கூட்டாக மாற்றுவது மிகவும் முக்கியமானது என பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இதனால் இரு நாடுகளினதும் சட்டவாக்க நிறுவனங்களுக்கிடையில் நிலவும் நெருக்கமான ஒத்துழைப்பு விருத்தியடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தக் கலந்துரையாடலின் போது இலங்கையின் அரசியலமைப்பு, தேர்தல் முறைமை மற்றும் நாடாளுமன்றத்தின் பணிகளும் அதன் செயற்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |