உலக சரித்திரத்தில் இடம் பிடித்த பசிலின் வரவுசெலவுத் திட்ட உரை- கேலி செய்யும் அரியநேத்திரன்!
சிறிலங்கா நாடாளுமன்ற சரித்திரத்தில் ஒரு நிதி அமைச்சர் நின்றும், இருந்தும், ஓய்வெடுத்தும், மாத்திரைகளை விழுங்கிக்கொண்டும் வாசித்த முதலாவது வரவுசெலவுத்திட்ட உரை கடந்த 12,ம் திகதி நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால்(Basil Rajabaksha) வாசிக்கப்பட்ட அவரது கன்னி வரவு செலவுத்திட்ட உரை மட்டுமே.
இது உலகத்தில் எந்த நாட்டிலும் இடம்பெறவில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன்(Ariyanethran) தெரிவுத்தார்.
நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சமர்பித்த 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வரவு இல்லாத செலவுகளே அதிகமாக இந்த வரவு செலவுத்திட்டத்தில் உள்ளதை அவதானிக்க முடிகிறது. நாட்டின் பொருளாதாரம் மிகவும் படுபாதாளத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இலங்கையில் வறுமைக்கோட்டில் வாழும் அடிமட்ட மக்கள் வறுமையினாலும் பஞ்சம் பட்டினிகளாலும் பாதிக்கப்படும் நிலையை இந்த வரவு செலவுத்திட்டத்தை அவதானிக்கும் போது நன்கு விளங்குகிறது.
தனது கன்னி வரவு செலவுத்திட்ட உரை என ஆரம்பத்தில் கம்பீரமாக நிதி அமைச்சர் உரையை தொடங்கினார். அதில் முன்னுரையிலேயே தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படும், இந்த நாட்டில் அடிப்படைவாதம், பயங்கரவாததிற்கு இனியும் இடமில்லை என கூறிக்கொண்டு செல்லும்போதே தொடர்ந்து நின்று உரையாற்ற முடியாதவாறு உடல் தளர்வு ஏற்பட்டதால் சபாநாயகரின் அனுமதியுடன் இருக்கையில் இருந்து வாசிப்பை தொடர்ந்தார்.
ஆனால் அதிலும் குரலில் சில தடைகள் ஏற்பட்டதால் நாடாளுமன்றம் பத்து நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டு அவர் ஓய்வு எடுக்கப்பட அனுமதி வழங்கப்பட்டு மீண்டும் வரவு செலவுத்திட்ட உரை தொடர்ந்தது. எனினும் படைக்கல சேவிதர் மாத்திரைகளை கொண்டு கொடுத்து அதனை விழுங்கிக்கொண்டே சுமார் இரண்டரை நிமிடங்கள் வரவு செலவுத்திட்ட உரையை வாசித்து முடித்தார்.
இலங்கை சுதந்திரம் 1948ம் ஆண்டில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு வரை 75, வரவு செலவுத்திட்ட உரைகள் பல நிதி அமைச்சர்களால் இலங்கை நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த 76வது வரவு செலவுத்திட்ட உரை மட்டுமே சரித்திரத்தில், நிதி அமைச்சர் நான்கு விதமாக, தமது உரையை அவஷ்த்தைப்பட்டு வாசித்துள்ளமையை காணமுடிந்தது.
முதலாவதாக நின்றும், இரண்டாவதாக இருந்தும், மூன்றாவதாக ஓய்வெடுத்தும், நான்காவதாக மாத்திரைகளை விழுங்கியும் வாசிக்கப்பட்ட ஒரு சாதனை வரவு செலவுத்திட்ட உரையாக இது இருந்ததை அவதானிக்க முடிந்தது. நிதி அமைச்சர் உரை சாதனையாக இருந்தாலும் உள்ளடக்கம் அவ்வாறானதாக இருந்ததா என்றால் இல்லை என்பதே பலரின் அபிப்பிராயங்களாக உள்ளன.
தற்போது நெற்செய்கைக்காக சேதன உரப் பாவனையை அரசு தீடிரென இராணுவப்பாணியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதை இலங்கையிலுள்ள பெரும்பாலான விவசாயிகள் ஏற்கவில்லை. இதனை எதிர்த்து பல போராட்டங்களை விவசாய அமைப்புகள் செய்கின்றன.
விவசாய அமைச்சர் உட்பட பல அமைச்சர்களும் போதாக்குறைக்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் சி.சந்திரகாந்தனும் சேதன உரத்தால் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்பட்டால் அதற்கான முழு நட்ட ஈட்டை அரசு விவசாயிகளுக்கு வழங்கும் என பகிரங்கமாக கூறியுள்ளனர்.
இந்த நட்ட ஈடு எவ்வாறு வழங்குவது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச வாசித்த வரவு செலவுத்திட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை எனவே விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்கப்படமாட்டாது என்பதே உண்மை.
நாட்டின் வருமானம் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.2 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில், வருமானம் இன்றி நாட்டை முன்னேக்கிக் கொண்டுசெல்ல முடியாத நிலையில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் கணிசமான அளவு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டாலும் நிவாரணத்தை செவ்வாய் கிரகத்தில் இருந்தா பெறுவது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.