அமளிதுமளியான நாடாளுமன்றம்- பரபரப்பான சூழ்நிலையில் ஆளும் தரப்பின் பங்காளிகள் வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு!
சிறிலங்கா நாடாளுமன்றம் அமர்வு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இதன் போது ஆளும் தரப்பின் பங்காளி கட்சிகள் தனித்து செயற்படுவதாக அறிவித்துள்ளனர். அந்த வகையில் ஆளும் தரப்பின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தனியான குழுவாக அமரவுள்ளதாக அநுர பிரியதர்ஷன யாப்பா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உட்பட கூட்டணிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று முதல் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை, உதய கம்மன்பில, திரான் அலஸ், கெவிந்து குமாரதுங்க உள்ளிட்டோர் சுயாதீனமாக செயற்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நாடாளுமன்றத்திற்கு சுற்றியுள்ள பிரதேசங்களில் பதற்றமான நிலைமை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நாட்டில் காணப்படும் நிலைமையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.