டலஸ் தலைமையிலான குழுவினரின் அதிரடி அறிவிப்பு!
சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் சுயாதீனமாக செயற்பட்டுவரும் டளஸ் அழகப்பெரும தலைமையிலான எம்.பிக்கள் குழு புதிய சபையொன்றை நிறுவியுள்ளது.
குறித்த குழுவினர் “நிதஹஸ் ஜனதா சபாவ” (சுதந்திர மக்கள் சபை) என்ற பெயரிலேயே புதிய சபையொன்றை நிறுவியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
புதிய குழுவை ஆரம்பித்த உறுப்பினர்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர். ஜி.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் சன்ன ஜயசுமன, பேராசிரியர் சரித்த ஹேரத், கலாநிதி நாலக்க கொடஹேவா, குணபால ரத்ணசேகர, கலாநிதி உபுல் கலப்பத்தி, திலக் ராஜபக்ச, டிலான் பெரேரா, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, கே.பி.எஸ் குமாரசிறி மற்றும் லலித் எல்லாவல ஆகியோரே இவ்வாறு எதிரணியில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்திருந்தனர்.
ஜி.எல்.பீரிஸின் அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமான அன்றைய தினமே (31.08.2022) தாங்கள் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ், நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே புதிய குழு ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.