நாடாளுமன்றத்தை கட்சி காரியாலயமாக்கவோ கச்சேரியாக்கவோ வேண்டாம் : லக்ஷ்மன் கிரியெல்ல
நாடாளுமன்றத்தை கட்சி காரியாலயமாக்கவோ கச்சேரியாக்கவோ வேண்டாம் என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரை பார்த்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று(17) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளின் போது சபாநாயகர் அறிவிப்பை முன்வைத்தார்.
நேர முகாமைத்துவம்
இதன்போது நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் உரையாற்றுவதற்கு போதுமான நேரம் வழங்குவதற்கும், நேர முகாமைத்தும் செய்யும் நோக்கிலும் நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கும் அதற்கு பதில் வழங்குவதற்குமாக 15நிமிடங்கள் மாத்திரம் வரையறுக்க இறுதியாக இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபைக்கு அறிவிப்பு செய்தார்.
இதன்போது ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பிய எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்றத்தில் அவ்வாறு நேரத்தை வரையறை செய்வது தொடர்பாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது கலந்துரையாடி இருந்தோம்.
ஆனால் அது தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளவில்லை. அதனால் நிலையியற் கட்டளையில் இல்லாத ஒன்றை மேற்கொண்டு இந்த நாடாளுமன்றத்தை கட்சி காரியாலயமாக்கவோ கச்சேரியாக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்,
முடியுமானவரை நேரத்தை கட்டுப்படுத்திக்கொள்ளும் விடயத்துக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்க தயார்”என்றார்.
அதற்கு சபாநாயகர் தற்போது நான் தீர்மானத்தை அறிவித்துள்ளேன் அதில் மாற்றம் ஏற்படுத்துவதாக இருந்தால் அடுத்த கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளலாம் என வலியுறுத்தியுள்ளார்.