பரபரப்பாக நகரும் சிறிலங்கா நாடாளுமன்ற அமர்வு - இன்னும் சில மணி நேரங்களில் நிர்ணயம்! நேரலை
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இறுதிக்கட்ட வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.
சிறிலங்காவின் நிதியமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்மொழியப்பட்டது.
இதன்போது வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அதனையடுத்து இன்று மாலை 5 மணிக்கு இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
காரசார விவாதம்
இன்றைய தினம், நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் கொள்கை வகுப்பு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இதன் போது ஆளும் எதிர்த்தரப்பினரிடையே காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது, ஆதரவாக 121 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
எதிர்த்த முன்னணி
இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தது.
இதேவேளை தமிழத்தேசிய கூட்டமைப்பு அந்த வாக்கெடுப்பை நிராகரித்திருந்தது.
இவ்வாறு அதிபரால் முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
கூட்டமைப்பின் நிலைப்பாடு
இந்நிலையில் அதில் பங்கேற்பது தொடர்பில் இன்று காலை தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று காலை இடம்பெறும் எனவும் அதில் அனைத்து பங்காளி அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அதனை புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.