ஏழாவது ஆண்டை பூர்த்தி செய்த மொட்டுக்கட்சி: பசில் தலைமையில் ஏற்பாடுகள் தீவிரம்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஏழாவது ஆண்டு நிறைவு விழா இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
சமய அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமை அளித்து, கட்சியின் ஏழாவது ஆண்டு விழா பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிரித் ஓதும் செயற்பாடுகள்
கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ தலைமையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸ, பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் சபாநாயகர் திரு சமல் ராஜபக்ஸ பொதுஜன பெரமுன கட்சியின் அமைச்சர்கள் ஆகியோர்களின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், சுயபரிகார தர்மம் தொடர்பான பிரசங்கம் இன்று இரவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதனுடன் பிரித் ஓதும் செயற்பாடுகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு அழைப்பு
இதனிடையே, மகா சங்கரத்தினம் எனும் தலைப்பில் நாளை (04) அன்னதானம் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிகழ்விற்கு பெருமளவான அமைச்சர்கள் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.