பதவி அதிகாரங்களை மறுக்கும் கோட்டாபய மற்றும் பசில் - புதிய பதவியில் நாமல்; புறக்கணிக்கப்படுவாரா பீரிஸ்!
பொதுஜன பெரமுனவில் எந்த பதவிகளும் வேண்டாம் என கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இரண்டாம் திகதி புதிய தலைவர்களை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பீரிஸின் பதவியில் மகிந்த?
இந்நிலையிலேயே இவ்வாறான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேவேளை, கட்சியின் தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து ஜீ.எல்.பீரிஸை நீக்கி விட்டு அந்த பதவிக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
எனினும், இதுதொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருவதால் எதிர்காலத்தில் இந்த நிலைப்பாடுகள் மாறலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அங்கத்துவக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் பெரமுன
இவ்வாறான நிலையிலேயே கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச மற்றும் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் எந்தவொரு பதவியையும் ஏற்கப் போவதில்லை என தீர்மானித்துள்ளனர்.
எனவே கூடிய விரைவில் தொகுதி அளவில் மக்களைச் சந்தித்து, அங்கத்துவக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க கட்சி முடிவு செய்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
