புனர்வாழ்வு நிலையத்தில் பதற்றம் – ஸ்தலத்தில் குவிக்கப்பட்ட இராணுவம் மற்றும் காவல்துறை!
சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.
பதற்ற நிலையையடுத்து, சம்பவ இடத்திற்கு காவல்துறையினரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
போதைப்பொருள் அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையமாக இயங்கிவரும் பொலனறுவை – சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
புனர்வாழ்வளிப்போருக்கு தொழிற்பயிற்சி
இதனையடுத்து, காவல்துறையினரும் இராணுவத்தினரும் குறித்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருடம் புனர்வாழ்வு அளிக்கப்படுவதோடு, அதில் முதல் ஆறு மாதங்களுக்கு அவர்கள் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
பின்னர், இந்த கைதிகள் தொழில் பயிற்சிக்காக சேனாபுர தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அழைத்துவரப்படுவது வழமையாகும்.
பொருளாதார நெருக்கடியால் வன்முறை
எவ்வாறாயினும் நேற்றும் இன்றும் சிலர் பொருளாதார நெருக்கடி காரணமாக வீட்டுக்கு செல்ல விரும்புவதாக கூறி வன்முறையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, ஒரு குழுவினர் தப்பிச் செல்ல முயன்று போராட்டத்தை ஆரம்பித்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அண்மையில் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்திருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.