ஸ்ரீலங்காவின் தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்திய அஹிம்சா விக்ரமதுங்க!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் புதல்வி அஹிம்சா விக்ரமதுங்க, ஸ்ரீலங்காவின் தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தியுள்ளார்.
கொலை விசாரணையை தடுத்த ஒரு அதிகாரியின் கைகளில் குற்றப் புலனாய்வுத் துறையை ஒப்படைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் ஒப்புதல் அளித்துள்ளதாக அஹிம்சா விக்ரமதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தனது தந்தையின் கொலை தொடர்பான விசாரணையில் ஆதாரங்களை சிதைத்தார் என குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் குற்றஞ்சாட்டப்பட்ட பிரசன்ன ஜே. அல்விஸை குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளராக நியமித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பி, ஸ்ரீலங்காவின் தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கு லசந்த விக்ரமதுங்கவின் புதல்வி அஹிம்சா விக்ரமதுங்க கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
இது எப்படி நடந்தது என நான் ஆணைக்குழுவிடம் கேட்கின்றேன். லசந்த விக்ரமதுங்கவின் மரணம் தொடர்பான ஆதாரங்களை சிரேஷ்ட காவல்துறை பரிசோதகர் பிரசன்ன ஜே. அல்விஸ் மறைத்ததாக கல்கிஸை நீதவான் நீதிமன்றில் கடந்த 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் 4ஆம் திகதி தெரிவிக்கப்பட்டது.
ஆதாரங்களை அழித்தல் மற்றும் மறைத்தல் பற்றிய சான்றுகள் குறித்த அறிக்கை, குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளராக அல்விஸ் நியமிக்கப்படுவதற்கு முன்னதாக சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஒரு கொலை விசாரணையை சீர்குலைத்த அதிகாரியின் கைகளில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தை ஒப்படைக்கும் செயற்பாட்டை ஆணைக்குழுவும் சட்டமா அதிபர் திணைக்களமும் அனுமதிப்பதை நம்பமுடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய அல்விஸ் தனது தந்தையின் வழக்கை மேற்பார்வையிட மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆகவே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தலைவராக குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியை நியமிக்க ஆணைக்குழு அனுமதியளித்தமை தொடர்பில் பதிலளிக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 140 வருட வரலாற்றில் ஒருபோதும் ஒரு அதிகாரியேனும் சிறிதளவேனும் ஒழுக்கக் குறைபாடுகளைக் கொண்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழலை அம்பலப்படுத்தியதற்காக ஒரு ஊடகவியலாளரை கொன்றதாக அரசு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கையின் மிக முக்கியமான தீர்க்கப்படாத கொலை வழக்கின் ஆதாரங்களை மறைத்ததாக நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்த ஒருவரை குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளராக நியமித்தபோது அந்த 140 வருட சாதனை மறைந்து போயுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விசாரணைகளைத் தகர்த்தெறியும் அரசின் முயற்சியைக் கண்ணை மூடிக்கொண்டு காவல்துறை ஆணைக்குழு
அனுமதிப்பதன் ஊடாக, காவல்துறை, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் முழு இலங்கை குற்றவியல் நீதி அமைப்பின் நம்பகத்தன்மையையும் இது பாதித்துள்ளதாக அஹிம்சா விக்ரமதுங்க குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே பிரசன்ன ஜே. அல்விஸை பணி இடைநிறுத்தவும் தனது தந்தையின் கொலை உள்ளிட்ட கீத் நொயர் மற்றும் உபாலி தென்னகோன் போன்ற ஊடகவியலாளர்கள் குறித்த வழக்கு விசாரணைகளின் முழுமையாக தணிக்கை செய்வதை தடுக்குமாறு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட ஒரு அதிகாரியை நியமிப்பதில் ஆணைக்குழு எவ்வாறு ஏமாற்றப்பட்டது என்பதை வெளிப்படுத்துவதோடு கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இணைத்துக் கொள்ளப்பட்ட நூறிற்கும் மேற்பட்ட பணியாளர்கள் குறித்த நற்சான்றிதழ்கள் மற்றும் ஒழுக்காற்று பதிவுகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
காவல்துறை ஆணைக்குழு மக்களுக்கு சேவை செய்வதோடு அரசியலமைப்பை பாதுகாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக லசந்த விக்ரமதுங்கவின் புதல்வி அஹிம்சா விக்ரமதுங்க தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
Tags : #Sri Lanka #Police