இஷாலினி மரணம் -பொலிஸாரின் செயற்பாடு தொடர்பில் கடும் குற்றச்சாட்டு
சிறுமி இஷாலினியின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் ஸ்ரீலங்கா காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.
வீட்டுப் பணிப்பெண்களாக சிறுவர்கள் அமர்த்தப்பட்டுள்ளனரா என்பதை கண்டறியும் சோதனைகளை முன் அறிவித்தல் வழங்கிவிட்டு ஸ்ரீலங்கா காவல்துறையினர் மேற்கொள்வது வேடிக்கையான ஒன்றெனவும் அவர் கூறியுள்ளார்.
ஹட்டனில் உள்ள மலையக மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், சிறுமி இஷாலினியின் மர்ம மரணம் குறித்து கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இஷாலினியின் மரணத்திற்கான நீதி மறுப்புக்கு காவல்துறையினர் ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில், அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன் அறிவித்தல் இல்லாமல் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டால் மாத்திரமே குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியும் எனவும் குற்றவாளிகள் தப்பித்து கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்கிவிட்டு அவர்களை தேடிச் செல்வது என்பது வெறுமனே கண்துடைப்பான ஒரு செயலாகவே கருத வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஏற்கனவே பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பெற்றுக் கொண்டு அவை தொடர்பாகவும் ஆராய்ந்து பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பெற்றோரும் தமது பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துவதில் ஆர்வம் காட்டுவதை தவிர்த்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் வலியுறுத்தியுள்ளார்.