போராட்டங்களில் பயன்படுத்தப்பட்ட கண்ணீர்ப்புகை தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர ஆய்வறிக்கை!
தென்னிலங்கையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்காக காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகளை சிறிலங்கா பாதுகாப்பு படையினர் பயன்படுத்தியுள்ளமை சமூகம் மற்றும் அமைதிக்கான மையத்தின் ஆய்வறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது.
அந்த ஆய்வின்படி, 2022 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களைக் கலைப்பதற்காக காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் 2000 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்ட குண்டுகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, துப்பாக்கிகளுக்கு அருகில் கண்ணீர்ப்புகையை பயன்படுத்தக்கூடாது என கண்ணீர்ப்புகை குண்டு தயாரிப்பாளர்கள் அறிவுறுத்தியுள்ள போதிலும், 2022 ஆம் ஆண்டில் துப்பாக்கிக்கு அருகிலேயே அதிகளவான கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.
காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள்
இந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“சிறிலங்கா காவல்துறை சேவைக்கு கண்ணீர்ப்புகை குண்டுகளைக் கொள்வனவு செய்த போது, அவற்றின் உள்ளடக்கம் தொடர்பில் இரசாயன ஆய்வு கூட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
2012 முதல் 2019 வரையான காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கொண்டுவரப்பட்ட 40,000 கண்ணீர்ப்புகைக் குண்டுகள் காலாவதியானவை என்பதுடன், 2022 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி வரை 8,265 கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அதிக சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்ட கண்ணீர்ப்புகை
இலங்கையில் கடுமையான நிதி நெருக்கடி காணப்பட்ட 2022 மார்ச் 31 முதல் ஜூலை 20 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள், காவல்துறை 84 சந்தர்ப்பங்களில் 6 ,722 கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளதுடன், அதன் பெறுமதி 26 மில்லியன் ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை 4 சந்தர்ப்பங்களில் கண்ணீர்ப்புகை குண்டுகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. 2022ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட கண்ணீர்ப்புகைக் குண்டில் 105 கிராம் இராசாயணம் கலக்கப்பட்டுள்ளது.
22 வருடங்களாக பயன்படுத்தப்பட்ட கண்ணீர்ப்புகை
மேலும் அதிக புகையினை கொண்ட கண்ணீர்ப்புகையே கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கண்ணீர்ப்புகை குண்டுகளின் ஆயுட்காலம் 5 வருடங்கள். 2000ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட கண்ணீர்ப்புகை 2005ஆம்ஆண்டு காலாவதியாகும்.
எனினும் 2000ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட கண்ணீர்ப்புகை 22 வருடங்களின் பின்னர் 2022ஆம் ஆண்டில் உபயோகிக்கப்பட்டுள்ளது என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
