மொட்டுவின் வேட்பாளர்! ரணிலே பொருத்தமானவர்: பிரசன்ன புகழாரம்
இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு தற்போதைய அதிபரே பொருத்தமானவர் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை ஸ்திரப்படுத்த மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்துயுள்ளார்.
மினுவாங்கொடை மற்றும் கம்பஹா உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுடன் நேற்று (15) உடுகம்பல பிரதேசத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மொட்டுக் கட்சியின் வேட்பாளர்
மேலும் உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, எதிர்வரும் அதிபர் தேர்தலில் மொட்டுக் கட்சியினர் என்ன செய்வார்கள் என அனைவரும் கேட்கின்றனர். மொட்டு இன்னும் வேட்பாளரை தெரிவு செய்யவில்லை என்பதை நான் மிகவும் பொறுப்புடன் கூறுகின்றேன். வேட்பாளரை முன்வைப்பதா இல்லையா என்பது குறித்து கட்சி இன்னும் ஆலோசித்து வருகிறது.
ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கப்பட வேண்டும் என நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை அதிபராக நாட்டை ஆள்வதற்கான மிக உயர்ந்த தகுதிகளை அவர் பெற்றுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாடும் அதன் மக்களும் மிகவும் சோகமான விதியை எதிர்கொண்டனர். மக்கள் வரிசையில் நின்று கடும் அவதிக்குள்ளாகினர். ஆனால் அன்று இருந்த பல பிரச்சினைகள் இன்று தீர்க்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இன்னும் பல பிரச்சினைகள் உள்ளன. இந்த நாட்டு மக்கள் எப்போதும் தேசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் அடிப்படையிலேயே அதிபர்களை தெரிவு செய்திருக்கிறார்கள்.
சோதனைக்கான நேரம் அல்ல
ரணில் விக்ரமசிங்க அதிபர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டால், கூட்டணியில் உள்ள கட்சியாக அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறேன்.
இப்போது அதிபர் வேட்பாளர்கள் மழை பொழிகிறார்கள். பல்வேறு தேசத்தில் இருந்து வேட்பாளர்கள் வருகின்றனர். ஒரு பெட்டிக்கடை அல்லது நிறுவனத்தை நீங்கள் கட்டுப்படுத்துவது போல் ஒரு நாட்டை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது.
பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், ஜனரஞ்சக அரசை நிறுவுவதற்கும் எமக்கு மிகக் குறைந்த காலமே உள்ளது. எனவே, மற்ற வேட்பாளர்களுக்கு ஒரு வாய்ப்பு கூட வழங்க நாங்கள் வாய்ப்பளிக்கவில்லை.
இது சோதனைக்கான நேரம் அல்ல. தற்பெருமை காட்டாமல் உழைக்கும் எதிர்காலத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. எனவே தற்போதைய அதிபரே தற்போது அதிபர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |