ஈழத்தமிழர்கள் அவதானித்தேயாகவேண்டிய புவிசார் அரசியல் -அ.நிக்ஸன்
ஈழத்தமிழர் விவகாரத்தைப் புவிசார் அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ப கையாண்டு, இலங்கைத்தீவின் இறைமை உள்ளிட்ட ஒற்றையாட்சி அரசைப் பாதுகாக்கும் நடைமுறைகளையே சிங்கள ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது கண்கூடு.
2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான புவிசார் அரசியலைப் பயன்படுத்தி அமெரிக்க, இந்திய மற்றும் சீன போன்ற வல்லாதிக்க நாடுகளிடம் இருந்து இராணுவ உதவிகளைப் பெற்று அப்போதைய இலங்கை இராணுவத்தின் பலவீனங்கள் சீர் செய்யப்பட்டன. அதன்மூலம் ஈழப்போர் இல்லாதொழிக்கப்பட்டது.
அதன் பின்னரான சூழலில் உருவான இந்தோ - பசுபிக் பிராந்தியப் போட்டிகளைப் பயன்படுத்திக் கடந்த பத்து ஆண்டுகளாக இதே வல்லாதிக்க நாடுகளிடம் இருந்து பெருமளவு நிதிகளைப் பெற்றுப் பொருளாதாரத்தில் இலங்கையை முன்னேற்றியும் வருகின்றனர் சிங்கள ஆட்சியாளர்கள்.
அரசியல் கட்சிச் செயற்பாடுகளுக்கு அப்பால் இலங்கை இராஜதந்திர சேவையின் ஊடாக உயர் அதிகாரிகள் குழு ஒன்று புதிய திட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டுமிருந்தது. 2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய நடைமுறை, தற்போது ராஜபக்ச அரசாங்கத்தில் மெருகூட்டப்பட்டிருக்கிறது.
மகாநாயக்கத் தேரர்கள். துறைசார்ந்த நிபுணர்கள் உள்ளிட்ட சாதாரண சிங்கள மக்களின் ஆலோசணைகள்கூட இங்கே பெறப்படுகின்றன.
இதற்கு இரண்டு வகையான அணுகுமுறைகள் கையாளப்படுகின்றன.
ஒன்று- சர்வதேசத்தில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தல். அல்லது அந்த அமைப்புகளை இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ற முறையில் மாற்றியமைக்கும் திட்டங்களை வெளிநாட்டில் உள்ள இலங்கை இராஜதந்திரிகள் மூலமாக முன்னெடுத்தல். (இத் திட்டத்திற்கு அமெரிக்கா பிரித்தானியா. ஜேர்மன் மற்றும் இந்திய இராஜதந்திரிகள் பலரும் ஒத்துழைக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் உண்டு)
இரண்டாவது- வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் காணிகள், தமிழர்களின் மரபுரிமைகளை மாற்றியமைத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய திட்டங்களை கொழும்பை மையமாகக் கொண்ட இலங்கை ஒற்றையாட்சி அரச திணைக்களங்கள் மூலம் கையாளுதல்.
இதனால் வடக்குக் கிழக்கு மாவட்ட அரச அதிபர் பதவிகள், பிரதம செயலாளர் பதவிகளில் தமிழர்கள் இருந்தாலென்ன சிங்களவர்கள் இருந்தாலென்ன என்ற நிலை.
இந்த இரு அணுகுமுறைகளும் 2015 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அதற்கு மேலும் சட்ட வலு கொடுக்கப்பட்டுச் சர்வதேசத்துக்கும் நியாயப்படுத்தப்படுகின்றது.
இதன் காரணமாகவே தமிழர்கள் ஒரு தேசம் என்பதை வெளியுலகுக்கு வெளிப்படுத்த வேண்டுமெனவும், தமிழ்த்தேசியக் கட்சிகள், தமது கட்சி அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால் ஒன்றினைந்து ஒருமித்த குரலாக வெளியுறவுக் கொள்கை ஒன்றை வகுக்க வேண்டுமென்றும் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், ஆய்வாளர்களான எம். நிலாந்தன், சி.ஆ. யோதிலிங்கம் ஆகியோர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர் போலும்.
ஆனால் இதுவரைக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகள் அவ்வாறான செயற்பாடுக்கு இணங்கியதாக இல்லை. கட்சி அரசியலுக்கு வெளியே நிபுணத்துவம் வாய்ந்த தமிழ் அதிகாரிகளை வெளியுறவுக் கொளயைக் கையாள ஒரு குழுவாகவும், பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுக்க மற்றுமொரு குழுவாகவும் தெரிவு செய்ய வேண்டும்.
சிங்கள ஆட்சியாளர்கள் மேற்படி இரு அணுகுமுறைகளைக் கையாள்வது போன்று தமிழ்த்தேசியக் கட்சிகளும் தமது தேர்தல் அரசியலுக்கு அப்பால், நிபுணத்துவம் மிக்க குழுக்களை நியமிக்க வேண்டும் என்பதை தற்போதைய புவிசார் அரசியல் கற்பிதம் செய்கின்றது.
கடந்த ஒரு வாரத்தில் ஆசியப் பிராந்தியத்தில் முக்கியமான மூன்று நிகழ்வுகள் இடம்பெற்றிருப்பதை தமிழர்கள் அவதானிக்க வேண்டும்.
ஒன்று- அமெரிக்க அன்டனி பிளின்கென் புதுடில்லிக்குச் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்திருக்கறார்.
இரண்டாவது- அமெரிக்கத் துணை வெளியுறவு அமைச்சர் வெண்டி ஷெர்மன் சீனாவுக்குச் சென்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, சீனத் துணை வெளியுறவு அமைச்சர் ஸீ பெங் ஆகிய இருவரையும் தனித்தனியாகச் சந்தித்து அமெரிக்க- சீன உறவு குறித்துப் பேசியிருக்கிறார்.
முன்றாவது- இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் அருகேயுள்ள திபெத் மாநிலத்துக்குச் சீன ஜனாதிபதி ஜிங்பிங் திடீரெனச் சென்றிருக்கிறார். இந்தியாவும் சீனாவும் வர்த்தக உறவில் அதிகளவு வருமானத்தை ஈட்டிவரும் நிலையில், அமெரிக்காவும் சீனாவும் வர்த்தக உறவுகளை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்தும் வருகின்றன.
ஆனால் இந்தியா- சீன எல்லை மோதல் மற்றும் இந்திய எல்லைகளில் சீனப் படைக்குவிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பதற்ற நிலையைச் சாதகமாக்கி இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவை மையப்படுத்திய இராணுவ உபாயங்களை அமெரிக்கா கையாளுகின்றது.
இவ்வாறான சிக்கல்களுக்கு மத்தியில் அரசியல் ரீதியான உறவுகளையும் சீர் செய்ய இந்த வல்லாதிக்க நாடுகள் முற்படும் நிலையில், இலங்கைத்தீவை மையமாகக் கொண்டே தமது நகர்வுகளை மேற்கொள்ளுகின்றன.
இந்த நகர்வுகளில் இரண்டு வகையான நோக்கங்கள் இந்த வல்லாதிக்க நாடுகளிடம் உள்ளன.
ஒன்று- சிங்கள ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்த அதிகளவு முதலீடுகளைச் செய்வது மற்றும் நிதியுதவிகளை ஏட்டிக்குப் போட்டியாக வழங்குவது. இலங்கை இராணுவத்தையும் தமது பிராந்தியத் தேவைக்கு ஏற்ப நவீனமயப்படுத்துவது.
இரண்டாவது- வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் முதலீடு அல்லது அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை, தமிழர் தாயகக் கோட்பாட்டைச் சிதைக்க வேண்டுமென்ற சிங்கள ஆட்சியாளர்களின் சிந்தனைகளை உள்வாங்கிச் செயற்படுத்துவது.
இதனை அமெரிக்க இந்திய அரசுகள் ஈழத்தமிழர்களைச் சமாதானப்படுத்தியும் ஏமாற்றியும் செய்ய முற்படுகின்றன. மோடியுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்டனி பிளின்கென் நடத்திய பேச்சுக்களில் இந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விவகாரத்தில் குவாட் (QUAD) அமைப்பின் செயற்பாடுகளை துரிதப்படுத்துவது மற்றும் இலங்கை மாலைதீவு போன்ற நாடுகளின் ஒத்துழைப்பைப் பெறுவது குறித்தே அதிகம் கவனம் செலுத்திருக்கிறார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஆகியோருடனும் அவர் பேசியிருக்கிறார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலக்கி கொள்ளப்படும் நிலையில், அதனால் ஏற்படும் பாதுகாப்பு பிரச்னைகள் அதன் பின்னரான இலங்கையைப் பிரதானப்படுத்திய இந்தோ- பசுபிக் விவகாரங்கள் குறித்தே இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் அன்டனி பிளின்கென் கூடுதலாகப் பேசியிருக்கிறார். அத்துடன் கொவிட் 19 நோய்த் தாக்கத்தினால் தற்போது இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளைச் சீர் செய்வதற்கான உதவிகள், மருத்துவ உதவிகள் பற்றியும் ஆராய்ந்ததுடன், இந்தியா மூலமாக இலங்கைக்கு வேண்டிய உதவிகள் அங்கு செய்யப்பட வேண்டிய முதலீடுகள் குறித்தும் பேசியிருக்கிறார்.
இரு தரப்பு இந்தோ- பசுபிக் தந்திரோபாயம் குறித்த தீர்மானங்கள் பற்றி அமெரிக்க அரசின் இணையத் தளம் (go.united.states) விரிவாகக் கூறுகின்றது.
இந்தியா பாரியதொரு பொருளாதாரத் தடுமாற்றத்துக்குள் சிக்கியுள்ள நிலையில், அன்டனி பிளின்கெனின் பயணம் டில்லிக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது. இதன் பின்னணியில் சீனாவைக் கட்டுப்படுத்தும் நகர்வுக்கான இலங்கை விவகாரம் முக்கியமானதொரு நிகழ்ச்சி நிரலாகவும் இருந்திருக்கலாம்.
அதேபோன்று சீனாவில் பேச்சு நடத்திய அமெரிக்கத் துணை வெளியுறவு அமைச்சர் வெண்டி ஷெர்மன், இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சுமூக நிலமைகளை ஏற்படுத்துவது உட்பட அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ நகர்வுகள் குறித்தும் பேசியிருக்கிறார்.
ஆகவே இலங்கையை மையமாக வைத்து அமெரிக்கா, இந்தியா மற்றும் சீன போன்ற வல்லரசுகளின் முத்தரப்புப் போட்டி நிலவுவதால், இந்தச் சந்திப்புகளையும் அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களையும் ஈழத்தமிழர்கள் உண்ணிப்பாக அவதானிக்க வேண்டும்.
அதேவேளை,சீன ஜனாதிபதி ஜிங்பிங் முன்னறிவித்தல் இன்றிக் கடந்த வாரம் மூன்று நாள் பயணமாக திபெத் சென்றமை, இந்தியாவுக்கு விடுக்கும் அச்சுறுத்தல் என்று அமெரிக்க குடியரசு கட்சி உறுப்பினர் டேவின் நியூன்ஸ் குற்றம் சுமத்தியுள்ளார். இந்தியாவின் அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதியில் உள்ள நியின்சி பிரதேசத்துக்குச் சென்ற ஜிங்பிங், அங்கு நடக்கும் வளர்ச்சிப் பணிகள் குறித்து இராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுமுள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளில் சீன ஜனாதிபதி ஒருவர் இந்திய எல்லைப் பகுதிக்குச் செல்வது இதுவே முதற் தடவை. இதனால், ஜனாதிபதி ஜோ பைடனுக்குச் சீனாவின் அடாவடிச் செயலைக் கண்டிக்க சக்தி இல்லை எனவும், சீனாவின் செயல்களுக்கு அமெரிக்கா துணை நிற்பதாகவும் டேவின் நியூன்ஸ் குற்றம் சுமத்தியிருக்கிறார்.
சீனாவுக்குச் சென்ற அமெரிக்க துணை வெளியுறவுச் செயலாளர் வெண்டி ஷெர்மன் , சீனாவுடனான நல்லுறவு குறித்துப் பேசியதால் அவர் இவ்வாறு கூறியிருக்கலாம். ஆனாலும் இந்தோ- பசுபிக் விவகாரம் உள்ளிட்ட பூகோள அரசியல் விவகாரங்களில் அமெரிக்கா மீது குற்றம் சுமத்தியுள்ள சீன வெளியுறவு அமைச்சு, மிகவும் தவறான வழிகாட்டுதலையும், ஆபத்தான கொள்கையையும் அமெரிக்கா மாற்றிக்கொள்ள வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சீனா துணை வெளியுறவு அமைச்சர் ஸீ பெங் கூறுகையில், 'சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும், அடக்கவும் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் முயற்சிக்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் கடுமையான சிரமங்களை எதிர் கொள்வதற்கான அடிப்படை காரணம், அமெரிக்கர்கள் சிலர் சீனாவை கற்பனை செய்யப்பட்ட எதிரியாக சித்தரிப்பதே ஆகும்' என்று கூறியுள்ளார்.
1951ல் சுதந்திரம் பெற்றுவிட்டதாக திபெத் அறிவித்தாலும், அந்த பகுதி தங்கள் கட்டுப் பாட்டில் இருப்பதாக சீனா தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்தியாவின் அருணாச்சல பிரதேச எல்லைக்கு அருகில் திபெத் அமைந்துள்ளதால், அது தெற்கு திபெத்துக்கு சொந்தமான பகுதி என சீனா உரிமை கொண்டாடியது. இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இதன் பின்னணியில் சீனா ஜனாதிபதி திபெத்துக்குச் சென்றமை குறித்தும் சீனா வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதுடன், திபெத் விவகாரம் பற்றிப் பேச இந்தியாவுக்கு உரிமை கிடையாதென்ற தொனியிலும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆகவே அரசியல் விடுதலை கோருகின்ற திபெத் மக்களைச் சமாளித்துத் தன்னை நியாயவாதியாக உலகத்துக்குக் காண்பிக்கச் சீனா முற்படுகின்றது. மறுபுறம் திபெத் மற்றும் உய்குர் இன முஸ்லிம்களை சீனா இன அழிப்புச் செய்வதாக இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் குற்றம் சுமத்தி, உலகில் சீனா மீதான வெறுப்பை உருவாக்க முற்படுகின்றன.
ஆனால்; ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களை வெறுமனே இலங்கை மக்களின் மனித உரிமைப் பிரச்சினையாக மாத்திரம் சுருக்கி, அதன் மூலம் சிங்கள ஆட்சியாளர்களிடம் பேரம் பேசித் தமது பிராந்திய நலன்களை இந்த வல்லாதிக்க நாடுகள் முன்னெடுக்கின்றன.
ஆகவே அரசுக்கு அரசு என்ற அணுகுமுறையின் ஊடே ஈழத்தமிழர்களின் எழுபது வருட அரசியல் போராட்டம் நசுக்கப்படுகின்றது. பந்தாடப்படுகின்றது.
இதனைப் புடம்போட்டுக் காண்பிக்கத் தேர்தல் அரசியலுக்கு அப்பால் நிலையான வெளியுறவுக் கொள்கையை தமிழர்கள் வகுக்க வேண்டிய தருணம் இது.
-அ.நிக்ஸன்