அரசு தன் தோல்வியை ஏற்று வீடு செல்ல வேண்டும்
நாட்டை நிர்வகிக்க முடியாமல் பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்கு கொண்டுசென்ற ஆளும் அரசாங்கம் தன் தோல்வியை ஏற்று பதவி விலக வேண்டுமென கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் (13) இவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இனவாதம், மதவாதத்தை மூலதனமாகக் கொண்டு ஆட்சிப் பீடம் ஏறிய அரசாங்கம் சிறந்த திட்டமிடல் இன்மையாலும் அதிக கடன், ஊழல் மோசடிகளாலும் அதல பாதாளத்திற்கு தள்ளிய பொருளாதாரத்தை இன்னும் இருபத்தைந்து வருடங்கள் சென்றாலும் எம்மால் கட்டியெழுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொருட்களின் தட்டுப்பாடு, எங்கும் வரிசைகள், கட்டுப்பாடு இல்லாத விலை ஏற்றம், பணவீக்கம், டொலர் தட்டுப்பாடு என பட்டியல்கள் நீண்டு கொண்டு செல்லும் இந்நிலையில் மேலும் இந்த அரசாங்கத்தின் பதவிக்காலத்தை நீடிக்க எம்மால் அனுமதிக்க முடியாது.
ஆகவே தமது தோல்வியை ஏற்று இந்த அரசாங்கம் தாமாக பதவி விலகிச் செல்லாத பட்சத்தில் இந்த அரசாங்கத்தை விரட்டி அடிப்பதற்காக தொடர் போராட்டக்களத்தில் பொதுமக்கள் இறங்குவதை தடுக்கவே முடியாது எனவும் அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
