மக்கள் பிரச்சினைக்கு துப்பாக்கி மற்றும் கண்ணீர் புகை மூலம் பதிலளிக்கும் பாசிசவாதியாக ரணில்!
கொழும்பில் நிராயுத போராட்டகாரர்களை அடக்க, ஆயுதங்களை பயன்படுத்தும் பாதுகாப்பு படையினரை அழைத்தமைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம் வெளியிட்டுள்ளது.
மேலும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக சிறந்த மறுசீரமைப்புக்காக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் மக்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தி குரல் கொடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அக்கட்சியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ரணில் விக்ரமசிங்க பதில் அதிபர் எனக் கூறிக்கொண்டு நாட்டில் அவசர காலச்சட்டத்தையும் ஊரடங்குச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்தி மக்களை அடக்க முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் போராட்டத்திற்கு செவிசாய்க்காத ரணில்
இதேவேளை எதிர்க்கட்சி, சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த நிலையில், அவை அனைத்தையும் புறந்தள்ளி விட்டு, பிரதமர் பாசிசவாதமாக மக்களை அடக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மக்களின் பிரச்சினைகளுக்கு துப்பாக்கி, கண்ணீர் புகை குண்டுகளின் மூலம் பதிலளிக்கக் கூடாது. மக்கள் போராட்டத்திற்கு செவிக்கொடுத்து ஜனநாயக ரீதியாக பிரச்சினையைத் தீர்க்குமாறு பிரதமரை வலியுறுத்துகிறோம் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.