ரணிலின் பதவிப் பேராசைக்காக மக்களை பலியெடுக்காதீர்கள் - சிறிலங்கா முப்படையினருக்கு வலியுறுத்தல்!
சிறிலங்காவின் அரச எதிர்ப்பு போராட்டகாரர்களை ஒடுக்குவதற்கு அதிகாரத்தில் உள்ள தலைவர்கள் மேற்கொள்ளும் சகல முயற்சிகளும் முறியடிக்கப்பட வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் பேரழிவு நிலைமை அனைத்து சந்தர்ப்பங்களிலும் தோற்கடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சமுக ஊடக அறிக்கையொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாடு ஏராளமான பேரிடர்களை எதிர்கொண்டுள்ளதுடன், பல இரத்தம் சிந்தப்பட்ட சம்பவங்களையும் கண்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அதிகார வெறி கொண்ட தலைவர்கள் சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுப்பதைத் தடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பொதுமக்கள் ஒன்று திரள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த நோக்கத்திற்காக தேசிய மக்கள் சக்தி தலைமைத்துவத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் அடக்குமுறைக்கு எதிராக தாம் துணை நிற்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தயவு செய்து மக்களின் குரலுக்கும், மக்களின் அபிலாசைகள், நோக்கங்களுக்கு செவிசாய்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போது அவசரக்காலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவொரு அடக்குமுறையான சட்டம் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்துக்கு எவ்வாறான அடக்குமுறை தேவைகள் இருந்தாலும் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் எந்தவொரு உத்தரவுகளுக்கும் இராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படையினரும் செவிசாய்க்கக்கூடாது எனவும் அவர் கோரியுள்ளார்.
மக்களின் பக்கம் முப்படையினர் நிற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கண்ணீர்புகை, நீர்த்தாரைப் பிரயோகங்கள் உள்ளிட்ட தாக்குதலை மக்களுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டாம். அதுபோல உங்களது ஆயுதங்களையும் மக்கள் பக்கம் திருப்ப வேண்டாம் எனவும் அவர் கோரியுள்ளார்.