எமது கறை படியாத இலக்குகளுடன் விளையாட வேண்டாம்..! சஜித் வலியுறுத்தல்
நாட்டு மக்களையும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டையும் கட்டி எழுப்புகின்ற இலக்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ளதன் காரணமாக, தற்போதைய அரசு அழுக்கு படிந்த அரசாக இருந்த போதிலும் அழுக்கு படியாத இலக்குடன் தாம் கலந்தாலோசிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அத்துடன் , அவ்வாறான அழுக்குகளற்ற இலக்குடன் விளையாட வேண்டாம் எனவும் சஜித் பிரேமதாச தற்போதைய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண தேர்தல் தொகுதிக் கூட்டம் நேற்று (21) இடம் பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
நாகரீகமான அரசியல் கலாச்சாரம் ஒன்று என்னிடம் காணப்படுகிறது

தொடர்ந்து கருத்துரைத்த அவர், " ராஜபக்சர்க்களின் வழியில் பயணித்திருந்தால் எனக்கும் அதிபர் பிரதமர் பதவிகளை பெற்றுக் கொண்டிருக்கலாம், நாட்டு மக்கள் ஒன்றிணைந்து ஒரே குரலாக வீட்டுக்குச் செல்லுமாறு கூறிய ராஜபக்சவிடமிருந்து பதவியைப் பெற்றுக் கொள்வதற்கு எனக்கு எந்த விதமான தேவைகளும் இல்லை.
52 நாட்கள் ஆட்சியில் பிரதமர் பதவியை ஏற்குமாறு என்னிடம் வேண்டப்பட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒரே முடிவாக அதை ஏற்க மறுத்தது ஏனெனில் நாகரீகமான அரசியல் கலாச்சாரம் ஒன்று என்னிடம் காணப்படுவதனாலேயாகும், அது இன்றும் அவ்வாறே காணப்படுகிறது.
2015 ஆம் ஆண்டு மக்கள் ஆணை ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கே கிடைத்தது, அச்சந்தர்ப்பத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்டவருக்கு துரோகம் இழைத்து பிரதமர் பதவியை பெறுவதற்கு அப்போது எனக்கு எந்த தேவையும் காணப்படவில்லை.
அன்று பிரதமர் பதவியை பெற்றுக் கொள்ளாமல் இருந்தது சரியாக இருந்தால் இன்று முழு நாடும் வேண்டாம் என்று தெரிவித்தவரிடமிருந்து அதிபர் பிரதமர் பதவிகளை பெற்றுக் கொள்ளாமல் இருப்பதும் சரியாகவே அமைய வேண்டும் " எனக் குறிப்பிட்டார்.
பெரும் திரளான மக்கள்

ஹொரண தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளர் பீ.டீ.அபேரத்ன அவர்களினால் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் குறித்த கூட்டத்திற்கு பெரும் திரளான மக்கள் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

