இன ஒற்றுமையை நிலைநாட்ட ஆரம்பப் புள்ளி? ராஜபக்சர்கள் போடும் திட்டம்
ஐ.நா சபையின் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கையின் நிலைப்பாடு என்னவென்றால், உள்நாட்டுப் பொறிமுறை மூலம் நடந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதே என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் (G. L. Peiris) தெரிவித்துள்ளார்.
இன்று(31) யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதனைக் கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாடு என்பவற்றை நிலைநாட்டி உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை உருவாக்கி அதன் மூலம் தீர்வு வழங்குவதனை எதிர்பார்க்கின்றோம்.
இந்த விடயத்தில் நாட்டின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மிகவும் உறுதியாகவுள்ளார். அதனை செயற்படுத்த பல்வேறுபட்ட முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்.
இன ஒற்றுமை மற்றும் நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு சாதகமான நிலை தற்போதைய அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது. இனங்களுக்கிடையில் ஒற்றுமை, நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு ஒரு ஆரம்பப் புள்ளியாக இருக்கின்றது.
சிலர் கூறலாம், இது போதுமானதான விடயம் அல்ல என்று -அதனை ஏற்றுக்கொள்கின்றோம்.
தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தில கூட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே 42 வருடங்களின் பின்னர் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2015 - 2019 வரை இருந்த அரசாங்கத்தில் கூட பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுமாறு யாரும் கூறவில்லை. மாற்றியமைக்கப்படவுமில்லை. தற்போதுள்ள அரசாங்கம் இந்தப் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கூட மாற்றங்களை செய்துள்ளது.
எனவே அவ்வாறு ஒரு முன்னேற்றகரமான ஒரு நிலை இருக்கின்ற போது, ஐ.நா சபையின் ஜெனிவா கூட்டத்தில் இந்த விடயங்களை எடுத்துரைக்க உள்ளோம்” என்றார்.
