கோட்டாபயவுக்கு ஆதரவான பேரணி மீது கல் வீச்சு!
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக அனுராதபுரம் நகரில் ஆர்ப்பாட்ட பேரணியின் போது பேரணியில் கலந்துக்கொண்டவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், தாக்கதல் நடத்திய நபரை அனுராதபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபயவுக்கு ஆதரவாக வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரகோன் உட்பட சிலர் அனுராதபுரம் நகரில் ஆர்ப்பாட்ட பேரணியை ஒழுங்கு செய்திருந்தனர்.
அதில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். அனுராதபுரம் புதிய நகரின் வங்கி பிளேஸ் பகுதியில் உள்ள பொதுஜன பெரமுனவின் மாவட்ட அலுவலகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பின்னர் மணிக்கூட்டு கோபுரம் அமைந்துள்ள பகுதிக்கு பேரணியாக சென்ற போது மருந்தகம் ஒன்றுக்கு அருகில் இருந்த நபர் பேரணியில் சென்றவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளார்.
அதனையடுத்து உடனடியாக காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர். பேரணி நடைபெற்ற வீதியில் புல் மற்றும் புண்ணாக்கு ஆகியன வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, “தானசாலை எஞ்சி இருக்கும் மாடுகளுக்கு” என அந்த இடத்தில் பதாகை ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.





