ரணிலின் நியமனத்தை ஏற்க மறுக்கும் பௌத்த தேரர்!
சிறிலங்காவின் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் தற்போதுள்ள சமூக முறைமையை மாற்றியமைக்க முடியாது. அவர் அரசியலமைப்பிற்கு முரணாகவே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் என அமரபுர மகா சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் 1948 ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்டு வந்த ஜனநாயகத்திற்கு என்ன ஆயிற்று? மகா நாயக்க தேரர்கள் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
புதிய பிரதமரின் நியமனம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அச்சங்கத்தின் பொதுச் செயலாளரும் பதில் மகாநாயக்க தேரருமான பேராசிரியர் பல்லேகந்தே ரத்தனசார தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாட்டில் தனிநபரை அடிப்படையாகக் கொண்ட அரசியலுக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட வேண்டும். சமூகத்திலிருந்து கட்சி சாராத ஒரு தலைவரே அரச தலைவராக தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறில்லை எனில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்று தெரிவித்தார்.
இதேவேளை இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை யாரும் ஏற்கவில்லை.
இவ்வாறான நிலையில் மூத்த அரசியல்வாதி என்ற ரீதியிலும் , சர்வதேச தொடர்புகளைக் கொண்டவர் என்ற ரீதியிலும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு கோட்டாபய முடிவு எடுத்துள்ளார்.
எனினும் இதன் ஊடாக நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண முடியும் என்று நாம் நம்பவில்லை. காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கையும் இதுவல்ல.
அவர்களால் கட்சி சாராத ஒருவரே இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவிற்கு மாத்திரமல்ல , நாட்டில் தற்போதுள்ள எந்தவொரு அரசியல்வாதிக்கும் பொருளாதாரம் குறித்த கண்ணோட்டம் கிடையாது.
எனவே சமூகத்திலிருந்து கட்சி சார்பற்ற சிறந்த தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
இது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.
இதனை அமரபுர மகா சங்கசபையின் நிலைப்பாடாகக் கருத வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
