தாக்குதலுடன் பணியை ஆரம்பித்த ரணில் - ஊடக சுதந்திரத்தின் மீதும் கை வைப்போம் என்பதான எச்சரிக்கையே இது
மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியதன் மூலம் சிறிலங்காவின் புதிய அதிபர் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படும் என்ற செய்தியை நாட்டுக்கு வழங்கி இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
அதிபர் செயலகத்திற்கு முன்னால் இருந்த காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் எதிர்ப்பை முன்வைக்கும் நோக்கில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
புதிய அதிபர் நேற்று பதவிப்பிரமாணம் செய்தார், இன்று அதிகாலை காலிமுகத்திடல் போராட்ட களத்தின் மீது மனிதாபிமானமற்ற தாக்குதலை நடத்தியே தனது பணிகளை ஆரம்பித்தார்.
முன்னரே வெளியேறுவதற்கு திட்டமிட்டிருந்த பேராட்டக்காரர்
போராட்டகாரர்கள் அதிபர் செயலகத்தில் இருந்து இன்று வெளியேறவுள்ளதாக அறிவித்திருந்தனர். மதியம் இரண்டு மணிக்கு அங்கிருந்து வெளியேறவிருந்தனர்.
அப்படி அறிவித்திருந்த நிலையிலேயே இந்த மோசமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிகாலையில், இராணுவத்தினர் வந்துள்ளனர். இராணுவத்தினரா என அடையாளம் காண முடியாத நபர்களும் இருந்துள்ளனர்.
இவர்கள் கூலிப்படையினரோ என்று எமக்கு தெரியாது. இவர்கள் போராட்டகாரர்கள் மீது மனிதாபிமானமற்ற வகையில் தாக்கியுள்ளனர். போராட்டகாரர்களுக்கு மட்டுமல்லாது உள்நாட்டு, வெளிநாட்டு செய்தியாளர்களையும் தாக்கியுள்ளனர்.
மோசமாகத் தாக்கப்பட்ட பெண்கள்
பெண்களையும் மோசமாக தாக்கியுள்ளனர். பௌத்த பிக்குமார் உட்பட மதகுருமாரை மோசமாக திட்டியுள்ளனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
ரணில் விக்ரமசிங்க குறைந்தபட்சம் அங்கிருந்து செல்லுங்கள் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கலாம் அல்லது கோரிக்கை விடுத்திருக்கலாம்.
இது நியாயமாக இருந்திருக்கும். எனினும் அப்படியான அறிக்கை மற்றும் கோரிக்கையை விடுக்காது, இப்படியான மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியதன் மூலம் அதிபர், நாட்டு மக்களுக்கும், இளைஞர்களுக்கும் செய்தி ஒன்றை வழங்கியுள்ளார்.
ஊடக சுதந்திரத்தின் மீதும் கை வைப்போம் என்று வழங்கிய செய்தியே இது
இது சாதாரண அரசாங்கம் அல்ல, இந்த அரசாங்கம் பேச்சுரிமை, போராடும் உரிமை, ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமை போன்ற ஜனநாயக உரிமைகளை அங்கீகரிக்காது, ஆரம்பத்தில் இருந்தே அடக்குமுறையையே பயன்படுத்தும் என்ற செய்தியை அதிபர் வழங்கியுள்ளார் என்றே நாங்கள் காண்கின்றோம்.
எதிர்க்கட்சி என்ற வகையில் இந்த நிலைமையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். குறிப்பாக உள்நாட்டு, வெளிநாட்டு செய்தியாளர்களை தாக்கியமையானது ஊடக சுதந்திரத்தின் மீதும் கை வைப்போம் என்று வழங்கிய செய்தியாகவே நாங்கள் பார்க்கின்றோம் எனவும் நாளின் பண்டார தெரிவித்துள்ளார்.