ஜனாதிபதி தேர்தல் குறித்து மன்னார் பிரஜைகள் குழு வெளியிட்டுள்ள அறிக்கை
நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்லும், அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும், சிறந்த தலைவரை உருவாக்க சிந்தித்து தெளிவுடன் வாக்களிக்கும் உரிமையை செயல்படுத்த வேண்டும் என மன்னார் (Mannar) பிரஜைகள் குழு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழு இன்றைய தினம் (18) அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
இலங்கை நாட்டின் குடிமக்களாகிய நாம் இப்பொழுது எமது நாட்டிற்கு பொருத்தமான தலைவரை தெரிவு செய்யும் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். பல்வேறு எண்ணங்களோடும், எதிர்பார்ப்புகளோடும், சுமைகளோடும், வேதனையோடும், இத்தேர்தலை சந்திக்கின்றோம்.
உரிமை மீறல்கள்
எங்களுடைய வேதனைகள், சுமைகள், அடிமைத்தனங்கள், எதிர்காலம் பற்றிய நம்பிக்கை அற்ற சூழல் நிலைகளுடன் எமது வாழ்விடம் எப்போது இல்லாமல் போகும் என்ற ஏக்கத்தோடும், பெரு மூச்சோடும், பயத்தோடும் நாம் வாழுகின்றோம்.
எங்கள் வேதனைகளை, பசியை, உரிமை பறிப்பு, வாழ்விடங்கள் அபகரிப்பை, வளங்களின் அழிப்பை, வளங்கள் அடாத்தாக திருடப்படுவதையும், எல்லா மட்டங்களிலும் இவ் பிரச்சனைகள் ஆழ வேரூன்றி மக்கள் வாழ்வில் சந்திக்கும் துன்பங்களை சொல்ல முடியாது, மற்றும் பகிர முடியாது வாய்கள் மூடப்பட்ட நிலையில் இருக்கின்றோம்.
அபிவிருத்தி என்ற போர்வையில் நாங்கள் அடிமைகளாக்கப்பட்டு வருவதையும், எமது உரிமைகள் மீறப்பட்டு வருவதையும், மனித வாழ்வுக்கு எதிராக மனித சக்தியினால் செயற்கையாக ஏற்படுத்தப்படும் பயங்கரமான அடக்குமுறையையும் மற்றும் எமது பழமை வாய்ந்த எங்கள் அடையளங்களையும் அழிக்கும் செயற்பாடுகளையும் எதிர்த்து நீதி கேட்கும் சந்தர்பங்களை முடக்கும் மற்றும் அழிக்கும், மனித நேயம் அற்ற அழிவு நிறைந்த செயல்கள் நடைபெறுகின்றன.
பிள்ளைகளை இழந்து, பெற்றோரை இழந்து, மனைவியை இழந்து, உடல் அவயங்களை இழந்து, கண்ணீரோடும், கவலையோடும், சுமைகளோடும், வாழும் எம் உறவுகள். மற்றும் தாங்கள் ஒப்படைத்த உறவுகள் மற்றும் எங்களிடம் இருந்து உறவுகளையும் வலுக்கட்டாயமாக பறித்து சென்ற உறவுகளை நினைத்து கண்ணீரோடும், கவலையோடும் வருந்தும் உறவுகளையும் கவலைக்கு உள்ளாக்குகின்றனர்.
அத்துடன் பல ஆண்டுகளாக அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அவர்களின் வருகையை எதிர்பார்த்து கவலையுடன் உள்ள உறவுகளுக்கு நீதி கிடைக்காதா? என்னும் கவலையோடும், மற்றும் தங்களின் சொந்த இடத்திற்கு சென்று மீன்டும் வாழ்வினை ஆரம்பிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம்.
பொருத்தமற்ற அரசியல் தலைவர்கள்
மிகவும் பயங்கரமான முறையில், மனித மாண்பற்ற முறையில் மனித உரிமைகள் அனைத்தும் திட்டமிட்ட முறையில் பறிக்கும் அரசியல் வாதிகளையும், அரசியல் தலைவர்களையும் கடந்த காலங்களில் தெரிவு செய்தோம். எமது வளங்களையும், காணிகளையும் சுரண்டும் மற்றும் விற்க தூண்டும் அரசியல் வாதிகளையும், அரசியல் தலைவர்களையும், கடந்த காலத்தில் நாம் தெரிவு செய்தோம்.
எமது பண்பாடுகளையும், மொழிகளையும், சமயங்களையும், மிகவும் பயங்கரமான முறையில் திட்டமிட்டு அழிக்கும் அரசியல் வாதிகளையும், அரசியல் தலைவர்களையும் கடந்த காலத்தில் தெரிவு செய்த மக்களாய் இன்றும் இத்தேர்தலை சந்திக்கின்றோம்.
எமது எதிர்கால புராதன வரலாற்றையும், எமக்குரிய வாழ் விடங்களையும், எமது
நிரந்தர வாழ்வாதார உழைப்புகளையும் அழிக்கும் மற்றும் துணைபோகும் அரசியல்
வாதிகளையும், அரசியல் தலைவர்களையும் கடந்த காலத்தில் தெரிவு செய்த மக்கள் நாம்.
மக்களின் உயிரை, அடிப்படை உரிமைகளை மதிக்காது மக்களின் வாழ்வுகளை பாதுகாக்காது, திட்டமிட்ட முறையில் மக்கள் மத்தியில் குடும்பங்களில், கிராமங்களில் மற்றும் மாவட்டங்களில் பிளவுகளையும், பிரச்சனைகளை ஏற்படுத்தும் தூய்மையற்ற அரசியல் செய்யும் அரசியல் வாதிகளையும், அரசியல் தலைவர் களையும் கடந்த காலத்தில் தெரிவு செய்துள்ளோம்.
படித்த இளம் சந்ததியினர் வேலைவாய்ப்பு இன்றி இளம் சமுதாயம் சீரழியும் நிலையில் தொழில் முயற்சிகள் அற்ற நிலையில் தீய பழக்க வழக்கங்களுக்கு ஈடுபடும் இன்றைய இளம் தலைமுறையின் எதிர்காலம் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது.
இவ் நிலை எதிர்கால வாழ்வை மாற்றுமா? என்ற நிலையில் இவ் தேர்தலை சந்திக்கின்றோம்.நாட்டு மக்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு. ஆகையால் தெளிவான சிந்தனையோடு ஆழமாக யோசித்து தங்களின் விருப்புகளின் அடிப்படையில் வாக்குகளை அளிக்க வேண்டும். தூய்மையான மற்றும் அமைதியான அரசியல் நாட்டில் நடைபெற வேண்டும்.
எம் மக்கள் அமைதியுடனும், சம உரிமைகளுடன் வாழ வேண்டும். அடிப்படை தேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும். நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்லும் மற்றும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும், சிறந்த தலைவரை உருவாக்க சிந்தித்து, சிறந்த தெளிவுடன் வாக்களிக்கும் உரிமையை செயற்படுத்துவோம்.“ என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |