முடிவுக்கு வரும் பயங்கரவாத தடைச் சட்டம்..! சிறிலங்காவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்
தேசிய பாதுகாப்பு சட்டம் எனும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக குறித்த சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (23) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.
வரைவை தயாரிக்கும் பணிகளில் விஜேதாச ராஜபக்ச
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " பயங்கரவாத தடைச் சட்டத்தில் உள்ள சில சரத்துகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இந்த தேசிய பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்படவுள்ளது.
இதற்குரிய சட்டமூல வரைவை தயாரிக்கும் பணிகளை நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச மேற்கொண்டுவரப்படுகிறது.
இந்த சட்டமூலத்தை எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், புதிய சட்டமூலம் நிறைவேற்றப்படும்போது பழைய பயங்கரவாத தடைச் சட்டம் ரத்தாகும்" எனக் குறிப்பிட்டார்.