சர்வதேசத்தால் விமர்சிக்கப்படும் சட்டத்தை ஆயுதமாக்கும் சிறிலங்கா - புதிய பின்னடைவு!
சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்த அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்டவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளமைக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் கண்டனங்களை வெளியிட்டுவருகின்றன.
இவ்வாறான நிலையில், போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஒரு புதிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பான சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் யாமினி மிஸ்ரா கருத்துத் தெரிவிக்கையில்,
“பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்ப்புக் குரல்களை ஒடுக்கும் அதிகாரிகள்
ஏற்கனவே உடனடியாக மீளெடுக்க வேண்டும் எனக் கூறி கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ள சட்டத்தை ஆயுதமாக்கும் நடவடிக்கையானது, எந்தவொரு விமர்சனத்தையும் தாங்கிக் கொள்ளத் தயாராக இல்லை என்பதற்கும், எதிர்ப்புக் குரல்களை கட்டமைக்கப்பட்ட ரீதியில் அதிகாரிகள் ஒடுக்குகிறார்கள் என்பதற்கும் ஒரு சான்றாகும்.
இது இலங்கையின் சர்வதேச மனித உரிமை கடப்பாடுகளுக்கு எதிரானது என்பதுடன், குறிப்பாக கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைகளுக்கு எதிரானது.
போராட்டக்காரர்களுக்கு பயங்கரவாத குற்றச்சாட்டு பொருந்தாது
போராட்டக்காரர்கள் செய்ததாகக் கூறப்படும் எந்தவொரு குற்றங்களுக்கும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் பொருந்தாது.
இவ்வாறான அதிகாரிகளின் நடவடிக்கையானது, அதிகப்படியான ஒன்றென்பதுடன், சர்வதேச சட்டத்தை மீறும் செயற்பாடு.
குற்றச்சாட்டு முன்வைக்கப்படலாம், சந்தேக நபர்களை ஒராண்டு வரை தடுத்துவைக்க பயங்கரவாத தடைச் சட்டம் அனுமதிக்கின்றது எனவும் இது சர்வதேச சட்டத்தை மீறும் ஒன்று” எனவும் யாமினி மிஸ்ரா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

