"தமிழீழ விடுதலைப் புலிகளை" பிளந்த ரணிலுக்கு இது பெரிய காரியமல்ல! காலி போராட்டக்காரர்கள் பகிரங்கம்
"தமிழீழ விடுதலைப் புலிகளை" பிளந்த ரணிலுக்கு இந்த போராட்டத்தையும் பிளப்பது சுலபம் என போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் கோட்டா கோ கம போராட்டக்காரர்களால் நாடாளுமன்றம் முற்றுகையிடப்பட்டு கைப்பற்றும் முயற்சி இடம்பெற்றது.
இதன் போதே காலி முகத்திடல் போராட்டாக்காரர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நாட்டில் நேற்றைய தினம் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் நேற்றிரவு நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
போராட்டக்காரர்களுக்கு அறிவுறுத்தல்
எனினும் இந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக நாடாளுமன்றத்தை கைப்பற்றும் முயற்சி முறியடிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு காலிமுகத்திடல் பகுதியில் இருந்து கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளனர்.
அத்துடன் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் பங்கேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் தொடர்பில் கேள்விப்பட்டதும் அதில் பொதுமக்களை கலந்துகொள்ள வேண்டாமென கேட்டுக் கொண்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளை நாடாளுமன்றை முற்றுகையிட்டிருந்த போராட்டக்காரர்களுக்கு அறிவுறுத்தலையும் வழங்கியுள்ளனர். அதாவது, ஏற்கனவே போராட்டக்காரர்கள், ஆக்கிரமிக்க வேண்டிய அதிபர் மற்றும் பிரதமர் செயலகங்களை ஆக்கிரமித்து விட்டோம்.
சர்வதேசத்தால் நிராகரிக்கப்படுவோம்
நாடாளுமன்றத்தையும் ஆக்கிரமித்து, அரசியலமைப்பு மூலமாக எமக்கு தீர்வு தரும் கடைசி அமைப்பையும் அழிக்க வேண்டாம் எனக் கோரியுள்ளனர்..
அதிபர் மற்றும் பிரதமர் செயலகங்களை ஆக்கிரமித்த வேளைகளில் ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை. அவ்வேளைகளில் இராணுவம் சுடவில்லை. ஆனால், இப்போது சுடலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், பெதும் கேர்னர் என்ற நபர் காலிமுக போராட்டத்தில் நுழைந்து "நாடாளுமன்றத்தை பிடி" என்ற தவறான வழிகாட்டலைத் தருகிறார்.
இதன்மூலம் போராட்டத்தில் பிளவு வருகிறது. மேலும், நாடாளுமன்றத்தில், சபாநாயகர் இல்லத்தில், கை வைத்தால் சர்வதேசம் எம்மை நிராகரிக்கும்.
ஏற்கனவே எமக்கு ஆதரவாக இருந்த சட்டத்தரணிகள் சங்கமும் இப்போது எம்மை விமர்சிக்கிறது என தெரிவித்துள்ளனர்.