கைது செய்யப்படும் போராட்டகாரர்கள்..! அதிகாரங்களை பயன்படுத்தி பழிவாங்காதீர்கள்: ரணிலுக்கு எச்சரிக்கை
அதிகாரங்கள்
புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்க மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவேண்டுமே தவிர, அவசரகாலநிலையின் மூலமான அதிகாரங்களைப் பயன்படுத்தி விமர்சகர்களைப் பழிவாங்குவதில் கவனம் செலுத்தக்கூடாது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களே ராஜபக்சர்களின் பதவி விலகலுக்கு வழிவகுத்தது எனவும் எச்சரித்துள்ளார்.
நாட்டில் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அதற்கு உரியவாறான தீர்வை வழங்கவேண்டும் என்றும், முறையற்ற பொருளாதார நிர்வாகத்தையும் தவறான தீர்மானங்களையும் மேற்கொண்ட ஆட்சியாளர்கள் பதவி விலகவேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த 4 மாதகாலமாக முன்னெடுக்கப்பட்டுவந்த மக்களின் தன்னெழுச்சிப்போராட்டங்களைத் தொடர்ந்து தற்போது நாட்டில் பல்வேறு அரசியல் ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
இருப்பினும் அப்போராட்டங்களின் முன்னரங்கில் நின்று இயங்கிய செயற்பாட்டாளர்கள் பலர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டும், தேடப்பட்டும் வருகின்ற பின்னணியில் இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மீனாக்ஷி கங்குலி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
பழிவாங்குவதில் கவனம் செலுத்தக்கூடாது
#SriLankaProtests demanded probity and accountability for rights abuses— a call that led highest Rajapaksa officials of resign. Their successor, President Ranil Wickremasinghe, should deliver rights, not focus on extracting revenge by using emergency powers to silence critics. https://t.co/qtSq1Q9F9M
— meenakshi ganguly (@mg2411) August 2, 2022
'இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் ஏற்கனவே இடம்பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறு வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளன. அந்த வலுவான கோரிக்கையே மிகவும் உயர்மட்டத்திலிருந்த ராஜபக்சர்களின் பதவி விலகலுக்கு வழிவகுத்தது.
எனவே அவர்களை வெற்றிகண்ட அதிபர் ரணில் விக்ரமசிங்க மக்களின் உரிமைகளை உறுதிசெய்யவேண்டுமே தவிர, விமர்சகர்களை அமைதிப்படுத்துவதற்காக அவசரகாலநிலை பிரகடனத்தின் கீழான அதிகாரங்களைப் பயன்படுத்தி பழிவாங்குவதில் கவனம் செலுத்தக்கூடாது' என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
