சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு முன்னால் பதற்றம்! 4 இராணுவ விரர்களை தூக்கிச்சென்ற போராட்டக்காரர்கள்! 75 பேர் வைத்தியசாலையில் (நேரடி ரிப்போர்ட்)
ஆறாம் இணைப்பு
இன்றைய(13) மோதல் சம்பவங்களில் 75 பேர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் இன்று இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களின்போது, படையினர், காவல்துறையினர் - போராட்டக்காரர்களிடையே ஏற்பட்ட மோதலில் குறித்த 75 பேரும் காயமடைந்துள்ளனர்.
நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் பத்தரமுல்லை - பொல்துவ சந்தியில் இன்றிரவு பதற்ற நிலை ஏற்பட்டது.
மேற்படி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு காவல்துறையினர் கண்ணீர்புகை மற்றும் தண்ணீர்தாரை பிரயோகங்களை மேற்கொண்டனர்.
இதன்போதான மோதலில் 33 பேர் காயமடைந்ததுடன், அவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக கொழும்பு - தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் காவல்துறை அதிகாரியொருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கொழும்பு - ஃப்ளவர் வீதி பிரதமர் அலுவலகத்துக்கு முன்னால் இடம்பெற்ற போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
அதன்போது, காவல்துறை மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 42 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(11.25 PM)
ஐந்தாம் இணைப்பு
நாடாளுமன்றத்திற்கு அருகில் பதற்ற நிலை அதிகரித்து வருவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அத்துடன் வீதித்தடைகளை அகற்றுவதற்காக போராட்டக்காரர்கள் ஜேசிபி இயந்திரத்துடன் வந்து வீதித்தடைகளை அகற்ற முற்பட்ட போது அந்த முயற்சி பாதுகாப்பு தரப்பினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அப்பகுதியில் மின் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி முற்றாக இருளில் மூழ்கியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் அப்பகுதியில் காவல்துறையினரால் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதுடன், தொடர் துப்பாக்கிப்பிரயோக சம்பவங்களும் பதிவாகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(09.40 PM )
நான்காம் இணைப்பு
பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் நிலை வலுப்பெற்றுள்ளது.
இதனையடுத்து இரு தரப்பிலிருந்தும் பலர் காயமடைந்துள்ளதாகவும், நாடாளுமன்றத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சபாநாயகர் வாசஸ்தலம் அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தை பாதுகாக்கவும், போராட்டக்காரர்கள் உள்ளே நுழைவதை தடுக்கவும் பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(09.25 PM)
மூன்றாம் இணைப்பு
நாடாளுமன்றத்துக்கு முன்னால் பதற்றம் அதிகரித்ததை தொடர்ந்து பாதுகாப்பு தரப்பினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள ஆரம்பித்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தும் வண்ணம் துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதே சமயம் போராட்டக்காரர்களும் எதிர்தாக்குதலை நடத்துவதற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
அதோடு, தாக்குதலை மேற்கொள்ள முன்நகர்ந்து வந்த சிறிலங்கா இராணுவத்தினர் 4 பேரை போராட்டக்காரர்கள் தூக்கிச் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
அவர்களை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் எடுத்து வேறொரு பகுதிக்கு கொண்டுசென்றிருப்பதாக தெரியவருகிறது. இது ஒரு பாரதூரமான செயலாக மாறும் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கிருக்கும் காவல்துறையினரும் துப்பாக்கி பிரோகங்களை மேற்கொண்டு முன்நகர்ந்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் குறித்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
(08.40 PM)
இரண்டாம் இணைப்பு
நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இரன்டு வீதித்தடைகளை தகர்த்து நாடாளுமன்றத்தை நோக்கி நகர்ந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்நிலையில், தற்பொழுது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இன்னும் இரு வீதித்தடைகளே நாடாளுமன்றத்தை அடைய இருக்கின்ற போதிலும், அந்த வீதித்தடைகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
(6.35 PM)
முதலாம் இணைப்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக கோரி இன்று இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் தற்பொழுது நாடாளுமன்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
நாடாளுமன்றத்தை அண்மித்த பொல்வதுவ சந்தியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் பிரதமர் செயலகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்பட்டு வந்த நிலையில் பிற்பகல் அளவில் போராட்டக்காரர்கள் பிரதமரின் செயலகத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.
போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்
இந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டிருந்தன.
மேலும், நாடாளுமன்றத்தை கைப்பற்ற முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், நாடாளுமன்றத்திற்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.