ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கக்கூடிய பதவிக்கு எதிராக பெண்கள் மனுத் தாக்கல்
இலங்கை தொடருந்து திணைக்களத்தின் தொடருந்து நிலைய அதிபர்கள் பதவிக்கு ஆண்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடுவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என குற்றஞ்சாட்டி இரண்டு பெண்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நீதிமன்றில் முன்னிலையான மனுதாரர்கள், தொடருந்து திணைக்களத்தின் தொடருந்து நிலைய அதிபர்கள் பதவிக்கு ஆண் விண்ணப்பதாரர்களை கோருவது பெண்கள் மீதான சமத்துவம் மற்றும் பாலின பாகுபாட்டை பாதிக்கிறது.
இது முற்றிலும் அரசியலமைப்புக்கு முரணான ஒரு செயலாகும் என தெரிவித்துள்ளனர்.
தொடருந்து திணைக்களம்
குறித்த மனு ஏ.எச்.எம்.டி. நவாஸ், பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி நுவன் போபகே, “தொடருந்து திணைக்களத்தினால் ஜூன் மாதம் வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டது.
அந்த வர்த்தமானியில் தொடருந்து நிலைய அதிபர்கள் பதவிக்கு 106 வெற்றிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த பதவிகளுக்கு ஆண்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
இதனை கருத்தில் கொண்ட நீதியரசர்கள் மனுவை விசாரணை செய்ய அனுமதி வழங்கியுள்ளதுடன் இந்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
