இலங்கையின் பொருளாதார நெருக்கடி -இந்தியாவுக்கு ஏற்படப்போகும் மோசமான பின் விளைவு - எச்சரிக்கிறார் சீமான்
இலங்கையின் பெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு சிங்கள இனவாத அரசுகளின் கொடுங்கோன்மை ஆட்சியும், இனவெறிச்செயல்பாடுகளுமே காரணம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை நாட்டில் நிலவி வரும் பெரும் பொருளாதார வீழ்ச்சியும், அத்தியாவசியப்பொருட்களின் கட்டுங்கடங்காத விலையுயர்வும் அந்நாட்டு மக்களை வாட்டி வதைத்து வருகிற செய்தியறிந்தேன்.
அந்நாட்டின் குடிகளாகிய அடித்தட்டு உழைக்கும் மக்களும், அன்றாடங்காய்ச்சிகளும் உணவுக்கே அல்லல்படுகிற நிலைக்குத் தள்ளப்பட்டு, வறுமையும், ஏழ்மையும் அங்கே தலைவிரித்தாடுகிற செய்திகள் கவலையைத் தருகின்றன.
நாட்டின் நலன், மக்களின் பொருளாதார மேம்பாடு போன்றவற்றில் துளியும் கவனம்செலுத்தாது, தமிழர்கள் மீதான இனவெறிச்செயல்பாடுகளிலும், இனஅழிப்பு வேலைகளிலுமே கவனம் செலுத்தி வந்த சிங்களக்கொடுங்கோல் ஆட்சியாளர்களின் கோர முகங்கள் இன்றைக்கு முழுவதுமாகத் தோலுரிக்கப்பட்டிருக்கின்றன.
தமிழர்கள் மீதான இனவெறுப்பையும், இனஒதுக்கல் கோட்பாட்டையும் சிங்களர்கள் மத்தியில் நாளும் விதைத்து, அதன்மூலம், அரசியல் பிரதிபயனும், இலாபமுமடைந்து, அதிகாரத்தைச் சுவைத்த சிங்கள ஆட்சியாளர்களை சிங்கள மக்களே இன்றைக்கு மோசமான நிர்வாகச் செயல்பாடுகளினால் எதிர்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.
சிங்கள ஆட்சியாளர்களின் தவறான ஆட்சி முறையினால் அந்நாட்டு மக்கள் கடும் பொருளாதார நலிவைச் சந்தித்து, பாதிக்கப்பட்டதால் வீதியில் நின்று போராடுகிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தன் நாட்டின் குடிகள் மீது இனஒதுக்கல் பாகுபாட்டைச்செய்து, அவர்களை அந்நியப்படுத்தும் வகையிலான பிரித்தாளும் சூழ்ச்சிகளைக் கையிலெடுத்து, ஒட்டுமொத்த மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்தாது, இனவெறிக்கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஒரு நாடு வீழும் என்பதற்கு சமகாலத்தில் இலங்கை ஒரு சாட்சியாகத் திகழ்கின்றது.
தமிழீழத்தாயகத்தை அந்நியர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கவும், காக்கவுமாகப் போராடிய தலைவர் பிரபாகரன் அவர்கள் வெறுமனே விடுதலைகேட்டுப் போராடுகிற ஒரு போராளி இயக்கத்தின் தலைவராக மட்டுமல்லாது, ஒரு நாட்டை அதுவும் சர்வதேசியமும், அனைத்துலக நாடுகளும் அங்கீகரிக்காத ஒரு தேசத்தை நிர்வகித்து, நல்லாட்சியை நிறுவிய நிர்வாகத்தலைவராகவும் திகழ்ந்தார். ஒருபுறம், தாயக மீட்புக்குப் போராடுகிற ஒப்பற்ற உலகின் தலைசிறந்தப் போராளியாகவும், மறுபுறம், தங்களது எல்லைக்குள் எல்லாவற்றிலும் தன்னிறைவை அடையப்பெற்ற ஒரு நாட்டை நிர்வகித்தப் பெரும் புரட்சியாளராகவும் திகழ்ந்தார்.
தமிழீழத் தாயகத்திற்கு ஒரு நாட்டுக்கான சர்வதேசிய அங்கீகாரம் கிடைக்கப்பெற்று, தலைவர் பிரபாகரன் அவர்கள் நிர்வாகத்தலைவராகவே முழுநேரமும் இயங்கும் வாய்ப்பு மட்டும் வரலாற்றில் வாய்க்கப்பெற்றிருந்தால் உலகின் தலைசிறந்த வல்லாதிக்க நாடுகளுள் ஒன்றாக தமிழீழம் திகழ்ந்திருக்கும் என்பது எவரும் மறுக்க முடியாத பேருண்மையாகும்.
தலைவர் பிரபாகரன் அவர்கள் நினைத்திருந்தால் அமெரிக்காவின் மூலமாகவோ, சீனாவின் மூலமாகவோ தமிழீழ நாட்டைப்பெற்று அதன் அதிபராக ஆகியிருக்க முடியும்.
ஆனால், அவ்வாறு செய்வதென முடிவெடுத்தால் பிறிதொரு நாட்டின் சார்போடு இயங்க வேண்டியிருக்கும்; பூகோளரீதியாக இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்றதுமல்ல என்றுணர்ந்து, அம்முடிவுகளை எடுக்காது முற்றாகத் தவிர்த்தார் தலைவர் பிரபாகரன்.
உலக வல்லாதிக்க நாடுகளின் துணையோடு பெரும் பெரும் தொகைகளைக் கடனாகப் பெற்று இலங்கை அரசு சண்டையிட்டபோது, தனது மக்களின் உழைப்பில் தன்னில் தாங்கும் தன்னிறைவான பொருளாதாரத்திலேயே படையைக் கட்டிப் போர்புரிந்தார் தலைவர் பிரபாகரன் அவர்கள்.
ஆனால், உலகமெங்கும் ஓடோடிச்சென்று, தமிழர்களுக்கெதிராக அணிசேர்க்கை செய்து, பாரிய அளவிலான தொகையில் கடன்களைப் பெற்று, தமிழர்களின் இனப்படுகொலையை அரங்கேற்றியது சிங்கள அதிகார வர்க்கம். ஒட்டுமொத்த நாட்டு மக்கள் குறித்து துளியும் கவலையற்று தமிழர்களுக்கெதிரான இனஅழிப்பையே முழுமையாக முன்னிறுத்திய சிங்கள ஆட்சியாளர்கள், எந்தந்த நாடுகளுக்கெல்லாம் ஓடோடிச்சென்று கடன்களைப் பெற்றார்களோ, இன்றைக்கு அந்த நாடுகளுக்கெல்லாம் கடனாளியாக மாறி நிற்கிறார்கள்.
உலக நாடுகளுக்கெல்லாம் கடனாளியாக மாறிய மெக்சிகோ நாட்டின் கொடிய நிலை இலங்கைக்கும் ஏற்படலாமென எச்சரிக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
உள்நாட்டின் அந்நியச்செலாவணி கையிருப்பு குறைந்துவிட்டதால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள், உணவுப்பொருட்கள், அத்தியாவசியப்பொருட்கள் என யாவற்றிற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அவை இன்று கட்டுக்கடங்காத அளவில் விலையுயர்ந்துள்ளன. மின்சாரத்தட்டுப்பாட்டால் நாளொன்றுக்கு 7 மணிநேரம் வரை மின்வெட்டு நடைமுறையில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சமையல் எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதால் உணவகங்களும் மூடப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாக, பணவீக்கமும், அதிகப்படியான கடன் விகிதமும் அந்நாட்டின் பொருளாதாரத்தை முற்றாகக் கேள்விக்குறியாக்கி, நாட்டின் எதிர்காலத்தையே பாழாக்கியிருக்கின்றன.
தற்போதைய சூழலில் இந்தியா போன்ற அண்டை நாடுகளிடம் கடன்களைப் பெற்று, நிலையை ஓரளவுக்குச் சரிகட்ட முயன்றாலும், மிகப்பெரும் பொருளாதாரச்சரிவைச் சந்தித்துள்ள அந்நாடு மீள்வதற்கான வாய்ப்புகள் அரிதாகிக் கொண்டிருக்கின்றன.
அயல்நாட்டுக்காக உள்நாட்டின் சட்டத்திட்டங்களிலே மாற்றம் கொண்டு வருகிற அளவுக்கு இலங்கையை மெல்ல மெல்ல சீனா விழுங்கிக் கொண்டு வரும் வேளையில், தற்போதையசூழல் சீனாவின் ஆதிக்கத்துக்கு முழுவதுமாக வழிதிறந்துவிட்டிருக்கிறது.
“ஆசியாவின் எழுச்சியை சீனாவால்தான் ஏற்படுத்த முடியும்” என சிங்கள ஆட்சியாளர்கள் வெளிப்படையாகக் குரலெழுப்பும் அளவுக்கு சீனாவின் கொலனி நாடாக இலங்கை மாறி நிற்கையில், தற்போதைய பொருளாதார நெருக்கடி இலங்கைக்கு மட்டுமல்லாது இந்தியாவுக்கும் பேராபத்தாகும்.
ஏற்கனவே, வடகிழக்கு மாகாணங்களில் அத்துமீறி உள்நுழைந்து, அருணாச்சலப்பிரதேசத்தை, ‘தெற்கு திபெத்’ எனச் சொந்தம் கொண்டாடி வரும் சீனா, தற்போது தெற்கே இலங்கையில் நிலைகொண்டிருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாகும்.
இந்நிலையில், இலங்கை அரசுக்கு 7,500 கோடி ரூபாய் கடனைத் தற்போதும், 3,750 கோடி ரூபாய் கடனைக் கடந்த மாதமுமென வழங்கியிருக்கும் இந்திய நாட்டின் செயல்பாடுகள் அதிர்ச்சியளிக்கின்றன.
இந்தியா எனும் நாட்டின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் வகையிலானவற்றை செய்யும் விதமாக சீனாவோடு உறவுகொண்டாடுவதும், மறுபுறம், இந்தியாவின் குடிகளான தமிழக மீனவர்களைக் கோரப்படுகொலை செய்வதுமான கொடும் போக்குகளில் ஈடுபட்டு வரும் இலங்கையுடன் இந்தியா நட்புறவு கொண்டாடுவதும், கடன்களை வாரி வழங்குவதும் வெட்கக்கேடானது.
இந்திய ஒன்றியத்தின் வரி வருவாயில் பெரும்பங்கை ஈட்டித்தரும் முன்னணி மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, தனது மாநில நலன்களுக்காகவும், பேரிடர் கால மீட்புப்பணிகளுக்காகவும், உட்கட்டமைப்புகளுக்காகவுமென கேட்கும் தொகையைத் தராமல் காலங்காலமாக வஞ்சித்து வரும் இந்தியாவை ஆளும் அரசுகள், இலங்கைக்குத் தாராளமாகக் கடன்களை வாரிவழங்குவது கடும் கண்டனத்திற்குரியது.
ஈழப்பேரழிவை நிகழ்த்தி, தமிழின மக்களைக் கொன்று குவித்த சிங்கள ஆட்சியாளர்களைக் காப்பாற்ற சர்வதேச மன்றத்தில் துணைநிற்கும் இந்தியப்பெருநாடு, தற்போது வரையிலும் அவர்களோடு ஒத்திசைந்து செல்வது மிகத்தவறான முன்னுதாரணம்; தமிழர்களுக்கு விளைவிக்கும் பச்சைத்துரோகம்.இத்தோடு, இந்தியாவின் எதிர்கால நலன்களுக்கெதிரான இரண்டமாகும்.
இந்தியப்பெருநாட்டின் வெளியுறவுக்கொள்கையை மாற்றாது, இந்நாட்டின் எல்லையில் பாதுகாப்பின்மையும், அந்நிய நாடுகளின் அச்சுறுத்தலும் இல்லாத ஒரு நிலையை ஒருநாளும் உருவாக்க முடியாது என்பது வெளிப்படையானதாகும்.
ஆகவே, இந்திய ஒன்றியத்தினுடைய பிராந்திய நலன்களுக்கு முற்றாக எதிர்திசையில் பயணித்து, சீனாவோடு இணக்கமாக இருக்கும் இலங்கை நாட்டையும், அதன் ஆட்சியாளர்களையும் எச்சரிக்காமல், அவர்களை அரவணைத்து அனுசரித்துச்செல்லும் போக்கு, வருங்காலங்களில் இந்தியாவுக்கு மோசமானப் பின்விளைவுகளை பூகோளரீதியாக ஏற்படுத்தும் என இந்தியாவை ஆளும் பாஜக அரசை எச்சரிக்கிறேன்.