நடைமுறை சாத்தியமற்ற கொள்கைகளே நெருக்கடிக்கு காரணம் - ரணில் சுட்டிக்காட்டு
நடைமுறை சாத்தியமற்ற கொள்கைகளை பின்பற்றியமையே இலங்கையின் நிதி நெருக்கடிக்கு காரணமெனவும், நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு அரசாங்கம் மட்டுமன்றி தனியார் துறையினரும் பொது மக்களும் பாரிய வகிபாகத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற செலவுத் திட்டத்திற்குப் பின்னரான கருத்துக்களம் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
வரவு - செலவுத் திட்டம்

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இது வழமையான வரவு - செலவுத் திட்டத்திலும் பார்க்க முற்றிலும் வித்தியாசமானது.
இங்கு முன்வைக்கப்பட்டிருக்கும் கொள்கைகளைப் பார்த்து சிகரட் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளனவா, வேறு ஏதேனும் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளனவா என்பதை தேட முடியாது.
அதே கண்ணோட்டத்துடனேயே இந்த வரவு - செலவுத் திட்டத்தையும் பார்ப்பீர்களேயானால் நீங்கள் தவறான பாதையில் பயணிக்கின்றீர்கள்.
துரதிஷ்டவசமாக நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் பலர் இந்தத் தவறை செய்கின்றார்கள். நாம் தற்போது முன்னொரு போதும் கண்டிராத எதிர்பராத பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இருக்கின்றோம். இது பல நாடுகளால் மற்றும் உலகமே சந்தித்திராததொரு நிலைமையாகும்.
தொழில்துறை மற்றும் உற்பத்தி போட்டித் தன்மைக்கு முகம்கொடுக்கும் வகையில் வர்த்தக சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டத்துடன் கூடியதாக சுங்கத் தீர்வை மற்றும் சுங்கமற்ற தீர்வை ஆகியவற்றை எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு நீக்குவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
அரசாங்கத் தரப்பு என்ற வகையில் உலக வங்கியுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
பொருளாதாரம் வளர்ச்சி

இதற்காக தனியார் துறை எவ்வாறான ஒத்துழைப்பை வழங்கப் போகிறது? சிவப்புக் கொடியைக் காட்டி எதிர்ப்பு தெரிவிப்பதா அல்லது ஒத்துழைப்பு வழங்குவதா என்பது தொடர்பில் தனியார் துறையினர் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.
பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தால் தனியார் துறையும் வளர்ச்சி அடையும் என்பதை நான் அறிவேன். வியாபார முன்னெடுப்புகளை அரசாங்கத்தால் முன்னெடுக்க முடியாது.
மக்களுக்கு அவசியமான சுகாதாரம், கல்வி மற்றும் நலன்புரி வசதிகளை வழங்குவதை அரசாங்கம் கையாள வேண்டியிருப்பதனால் தனியார் துறையினரே வியாபாரங்களை முன்னெடுக்க வேண்டும்” - என்றார்.