பூதாகரமான எரிபொருள் பிரச்சினை: ஆரம்பமாகியது சிஐடி விசாரணை!
எரிபொருள் விநியோகத்தை முடக்குவதற்கு சதி மேற்கொள்வது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தின் போது வழங்கும் தள்ளுபடி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை காரணம் காட்டி, இந்த சதி இடம்பெற்று வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எரிபொருள் விநியோக செயல்முறையை சீர்குலைத்து, அரசாங்கத்திற்கு சிரமத்தை ஏற்படுத்த எரிபொருள் விநியோக முகவர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு குழு முயற்சிப்பதாகவும், இதனால் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், முறைப்பாட்டின் அடிப்படையில், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அத்தோடு, சாதாரண வாழ்க்கையை சீர்குலைத்து, நிலையற்ற தன்மையை உருவாக்கி, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை
இவ்வாறானதொரு பின்னணியில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக எரிபொருள் விநியோகஸ்தர்களின் சங்கம் தங்களின் 3 சதவீத தள்ளுபடி இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறி எரிபொருள் விநியோகிப்பததை நிறுத்துவதாக அறிவித்திருந்தது.
அதனை தொடர்ந்து, இன்றுடன் எரிபொருள் கையிருப்பில் இருக்காது என செய்திகள் வெளியாகியதைடுத்து, பீதியடைந்த மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிந்த நிலையில் அங்கு பெரும் வரிசைகள் உருவாகின.
எவ்வாறாயினும், எரிபொருள் விநியோகம் குறித்து வெளியான செய்திகளை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC)மறுத்ததுடன், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்புகளே இல்லை என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
