அரசாங்கத்தை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க தயாராகவுள்ளோம்- நாட்டில் சோறு சாப்பிடும் மாடுகள் இல்லை!
நாட்டு மக்கள் மிகவும் கஷ்டங்களுக்கு உள்ளாக்கப்படும் வரை காத்திருந்து விட்டு, எதிர்வரும் ஏப்ரல் 11 ஆம் திகதி நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதன் பின்னணியில் மிகப் பெரிய மோசடி இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதாக கூறி, அரச பணத்தை தவறாக பயன்டுத்தி தனிப்பட்ட விஜயத்தை மேற்கொள்ள உள்ளார் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
கொரோனா தொற்று நோய், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டு மக்களுக்கு தமது புத்தாண்டு சம்பிரதாயங்களை கூட செய்ய முடியாமல் போனது.
இப்படியான நிலைமையில் பசில் ராஜபக்ச தனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் பாற்சோறு சாப்பிட அமெரிக்காவுக்கு செல்கிறார் என்பதை எவரும் மறுக்க முடியாது. பசில் ராஜபக்ச பொருளாதார பிரச்சினைக்கு தீர்வை தேட செல்லவில்லை.
பிச்சை எடுத்து சாப்பிடும் நாட்டின் டொலர்களை எடுத்துக்கொண்டு, உத்தியோகபூர்வ பயணம் என காட்டி, நாட்டின் அப்பாவி மக்களின் பணத்தில் பிள்ளைகளுடன் புத்தாண்டை கொண்டாடப் போகிறார்.
ஐயா ராஜபக்ச அவர்களே இந்த மோசமான செயலை நிறுத்துங்கள். சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லும் தேவை இருந்திருந்தால், இதற்கு முன்னர் சென்றிருக்கலாம். புத்தாண்டுக்கு சொந்த நாட்டுக்கு செல்ல ஏற்பாடு செய்து கொண்ட வேலை.
இந்த நாட்டில் சோறு சாப்பிடும் மாடுகள் இல்லை என்பதை ராஜபக்சவினருக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என ஹேசா விதானகே குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, அரசாங்கத்தை ஆட்சி கட்டிலில் இருந்து இறக்க ஐக்கி மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது.
நாட்டு மக்கள் பெரும்பாலும் தற்போது வரிசைகளில் நிற்கின்றனர். தமது அன்றாட வாழ்க்கையின் பொருளாதார பிரச்சினைகளை ஒரு புறம் வைத்து விட்டு, வீட்டின் அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வரிசைகளில் நிற்கின்றனர்.
ராஜபக்சவினர் நாட்டில் சௌபாக்கியத்தை ஏற்படுத்துவதாக கூறி, மக்கள் வரிசைகளில் நிற்கும் யுகத்தை உருவாக்கியுள்ளனர். வரிசைகளில் நிற்கும் மக்களுக்கு தற்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற தேவை இருப்பது எமக்கு தெரிகிறது.
அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் மக்களின் பொதுக் கூட்டத்தை எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் நடத்தவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
