ஆட்சியாளர்கள் அதிகாரத்தைக் கைவிட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும்- பகிரங்க சவால் விடுத்த எரான்!
மக்களுடன் செய்து கொள்ளப்பட்ட சமூக ஒப்பந்தத்தை ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லையேல், அதிகாரத்தைக் கைவிட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏரான் விக்ரமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாட்டு மக்களுக்கு உணவு வேண்டும். மின்சாரம் வேண்டும் என அரசாங்கத்திடம் கும்பிட்டு கோரிக்கை விடுக்க முடியாது. ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையில் உள்ள சமூக உடன்படிக்கையின் பிரகாரம் அதனைச் செய்ய வேண்டியது ஆட்சியாளர்களின் தார்மீக கடமை.
நாட்டில் நிர்வாகத்தில் உயர் பதவி வகிப்பவர்கள் பதவி விலகுகிறார்கள், அல்லது பதவி விலக்கப்படுகிறார்கள். உண்மையில் அரசாங்கம் மக்களுக்கு தடையற்ற மின்சாரத்தை வழங்க வேண்டும். அது மக்களின் உரிமை. அவசியமான ஒன்று. ஆனால் மின்சாரத்தை வழங்குவதற்கு எரிபொருள் இல்லை.
எரிபொருளை கொள்வனவு செய்ய டொலர் இல்லை என்ற கதைகளை அரசாங்கம் கதைக்க முடியாது. மத்திய வங்கியின் ஆளுநரும், அரசாங்கமும் மக்களுக்குப் பொய் சொல்கிறார்கள்.
வெறுமனே கதை சொல்லிக் கொண்டு இருக்காமல், மின்சாரத்தை தடையின்றி வழங்க முடியுமா என அரசாங்கம் எங்களுக்குச் சொல்ல வேண்டும். முடியும் என்றால் செய்யுங்கள் என நான் ராஜபக்ஷக்களுக்கு சவால் விடுக்கிறேன்.
ஆகவே மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது ஆட்சிகளின் கடமை, பொறுப்பு. அதனை செய்ய முடியாது போனால் ஆட்சி அதிகாரத்தை கைவிட்டு விட்டு வீடு செல்லுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
