அரசாங்கத்தால் மனமுடைவு - அமைச்சுப் பதவியை துறக்கத் தயார் என்கிறார் சனத் நிஷாந்த
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, தமது அமைச்சுப் பதவியை இழக்கத் தயார் என தெரிவித்துள்ளார்.
கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.
மூத்த உறுப்பினர்கள் புறக்கணிப்பு
சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்காக பாடுபட்ட பல மூத்த உறுப்பினர்கள் தற்போது நாடாளுமன்றத்தின் கடைசி இருக்கையில் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறாக தமது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தொடர்ந்தும் தற்போதைய அரசாங்கத்தால் நிராகரிக்கப்படுவதையும் புறக்கணிக்கப்படுவதையும் கருத்தில் கொண்டு தாம் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், மக்களுக்கு சேவை செய்வதற்கு அமைச்சுப் பதவி தேவையில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
ஒரு கட்சியாகவும், குழுவாகவும் முன்னேற எந்தவொரு தியாகத்தையும் செய்ய தாம் தயாராக இருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
