இடைக்கால வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் தொடர்பில் வெளியான அறிவித்தல்
அரசாங்கத்தின் எதிர்வரும் நான்கு மாதங்களுக்கான வரவுசெலவு திட்டம் மீதான விவாதம் இம்மாதம் இறுதியில் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
ரணில் விக்ரமசிங்க பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பின்னர் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் வரவு செலவுத்திட்டம் அப்போது அதிபராக இருந்த கோட்டாபயவினால் இடைநிறுத்தப்பட்டது.
அத்துடன், கடந்த மே மாதம் இரண்டு மாதங்களுக்கான வரவுசெலவு திட்டம் ஒன்றையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அனுமதியினை பெற்றுக் கொண்டார்.
இடைக்கால வரவு செலவுத்திட்டம்
இந்நிலையில், எதிர்வரும் நான்கு மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத்திட்டம் இம்மாதம் 30ஆம் திகதி தொடக்கம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. அதன் பிரகாரம், இம்மாதம் 30ஆம் 31ஆம் திகதிகளிலும் செப்டம்பர் மாதம் 1ஆம் மற்றும் 2ஆம் திகதிகளிலும் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.
நேற்று(10) நடைபெற்ற நாடாளுமன்ற நிலையியல் குழுக்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் இதற்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமை தாங்கியிருந்தார்.
மேலும், குறித்த இடைக்கால வரவு செலவுத் திட்ட உத்தேச வரைபை பிரதமர் தினேஷ் குணவர்த்தன நிலையியல் குழுக்கள் கூட்டத்தில் முன்வைத்திருந்தார்.