இலங்கைக்கு ஆபத்தாக மாறிய ஐ.எம்.எவ் உதவிப் பொதி
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திலிருந்து மக்கள் மீதான தாங்க முடியாத வரிச்சுமையைத் தவிர வேறு எதையும் இலங்கைக்கு இதுவரை கிடைக்கவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று(1) பத்திரமுல்ல பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிச்சயமற்ற உதவிப் பொதி
“சர்வதேச கடன்களை மறுசீரமைக்கும் நம்பிக்கையுடன் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியது. ஆனால், 17 மாதங்களுக்குப் பின்னரும் இலங்கையால் ஒரு டொலரை மறுசீரமைக்கவோ அல்லது குறைக்கவோ முடியவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையும் நிச்சயமற்றதாக மாறியிருக்கிறது.
சர்வதேச நாணய நிதிய குழுவினரின் சமீபத்திய இலங்கை விஜயத்தின் பின்னர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக அரசாங்கம் பல்வேறு வரிகளை விதித்ததுடன், மின்சாரம், நீர் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகளை அதிகரித்தமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இது மக்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.
வருமான வரி
இலக்கிடப்பட்ட அரச வருமானம் எட்டப்படவில்லை எனக் கூறி சர்வதேச நாணய நிதியம் அதிக வரிகளை விதிக்கவும் மின்சார கட்டணங்களை மேலும் அதிகரிக்கவும் அரசாங்கத்தை தொடர்ந்தும் நிர்ப்பந்தித்து வருகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின்படி, இலங்கைக்கு எதிர்பார்க்கப்பட்ட இலக்கை விட 15 சதவீதம் குறைவாக அரச வருமானம் கிடைக்கிறது” என்றார்.
இதேவேளை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வருமான வரி விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.