தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மறந்த இந்தியா - தொடர்ந்தும் வீதியில் உறவுகள்!
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழரின் அரசியல் சுதந்திரம் பற்றி நினைக்கவே இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் போராட்டம் ஆரம்பித்து 2000 நாளை நினைவு கூர்ந்து இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
எங்கள் இறுதி இலக்கு இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி, சர்வஜன வாக்கெடுப்பு மூலம் இறையாண்மை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிவதாக உள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டோம்
உலகில் நாம் தான் 2000 நாட்கள், தொடர்ந்து போராடி வருபவர்களாக இருக்கின்றோம். எத்தனையோ தடைகளை கடந்து வந்திருக்கிறோம். நாங்கள் இது வரை 121தாய்மார்களை இழந்துள்ளோம்.
மேலும் எங்கள் போராட்டத்தின் முதல் நாளிருந்து எங்களுடன் இருந்த 12 தாய்மார்கள் மற்றும் நான்கு தந்தைகள், உயிரிழந்தனர். சிறிலங்கா அரசாங்கத்தின் கொழும்பு அழைப்பினால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம்.
அங்கு அவர்கள் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல என்ஜிஓ, வழக்கறிஞர்கள் மற்றும் சில சுவிஸ் அதிகாரிகள் இந்த போராட்டத்தை கைவிட்டு OMB இல் சேருமாறு கேட்டுக்கொண்டனர். நாங்கள் மறுத்தோம்.
துரதிஷ்டவசமாக ஏனைய 7 மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள் தங்களது தொடர்ச்சியான போராட்டத்தை கைவிட்டு OMB உடன் சேர்ந்தனர். ஆனால், கடைசியில் அது தங்களின் தவறு என்றும் உணர்ந்தனர்.
இந்தியா மீதும் நம்பிக்கை இல்லை
குறிப்பாக கிளிநொச்சியில் அம்மாக்கள் போராட்டத்தை கைவிட்டு சுவிஸ் அதிகாரிகளின் சொல்லை கேட்டு OMBயில் இணைந்தனர். சில தாய்மார்கள் சில சிங்கள அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றினர்.
ஆனால் நாங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்துள்ளோம். இந்தியா மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.
ஆனால் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா சிறிலங்காவுக்கு அனைத்து ஆதரவையும் வழங்கியது. தமிழர்களுக்கும் வாக்குறுதியளிக்கப்பட்ட அரசியல் தீர்மானத்திற்கும் எந்தவிதமான முயற்சியம் இந்தியா எடுக்கவில்லை என்பதை நாம் பார்த்தோம்.
சில இளம் வழக்கறிஞர்களைப் பார்த்தோம், நல்ல நம்பிக்கை வந்தது. அவர்கள் தேர்தலில் வெற்றி பெற உதவினோம். இப்போது இந்த தமிழ் எம்.பி.க்கள், சிங்களக் கைதிகள் மற்றும் ஆசிரியர் சங்கத் தலைவர் குறித்து கவலை கொண்டுள்ளனர்.
தமிழரின் அரசியல் சுதந்திரம் பற்றி சிந்திக்காத தமிழ் எம்.பிக்கள்
எமது தமிழ் அரசியல் கைதிகளைப் பற்றி அவர்கள் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. வாக்கெடுப்பு நடத்தப் போவதாக மக்களுக்கு உறுதியளித்தனர். ஆனால் இப்போது சமஷ்டி பற்றி பேசுகிறார்கள்.
கூட்டமைப்பு பயனற்றது என்று எங்களுக்குத் தெரியும், இப்போது அனைத்து தமிழ் எம்.பிக்களும் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது பற்றி யோசித்துக்கொண்டிருப்பதைக் கண்டோம்.
தமிழரின் அரசியல் சுதந்திரம் பற்றி அவர்கள் நினைக்கவே இல்லை. 2000 நாட்களில், நாங்களும் பலவற்றை கற்று சில உறுதியான முடிவுகளைக் எடுத்துள்ளளோம்.
1. தமிழர்களுக்கு வடகிழக்கில் தாயகம் வேண்டும் .
2. இந்த தாயகம் பாதுகாப்பான பாதுகாக்கப்பட்டதாக வேண்டும்.
3. பாலியல் பலாத்காரம், கடத்தல், கொலைகள், இனவழிப்பு போன்றவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நமக்குச் சொந்த இறையாண்மை இருக்க வேண்டும்.
4. ஐ.நாவினால் கண்காணிக்கப்படும் வாக்கெடுப்பு மூலம் நமது பாதுகாப்பை அடைவதற்கான முறையான வழி.
5. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நல்லெண்ணத்தால் மட்டுமே அனைத்தும் சாத்தியமாகும்.
6. நாம் இறையாண்மையைப் பெற்றால், நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்க்க முடியும், குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிப்பது இலகுவாகும் .
7. எங்கள் குழந்தைகள் எங்கு என்று எங்களுக்குத் தெரியும். அவர்களில் சிலர் பாலியல் அடிமைகளாகவும், வேலைக்காரர்களாகவும், அவர்களில் சிலர் பிக்குகளாகவும், சிலர் சிங்களவர்களாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில், வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் தமிழர்களைப் பார்க்க பாவமா இருப்பதாக கூறியிருந்தார் என்பதை நாம் இன்று சொல்ல விரும்புகிறோம்.
ஏனெனில் சிங்களவர்கள் தமிழருக்கு எதிராக வேலை செய்ய தமிழர்களை பணம் கொடுத்து உளவாளிகளாகவும், சம்பளம் வாங்கும் கொலைகாரர்களாகவும், போதைப்பொருள் கடத்துபவர்களாகவும், விபச்சாரிகளாகவும், தமிழ் கலாசாரங்களை அழிப்பதற்காகவும் பயன்படுத்தகிறார்கள்.
எமக்கு இறையாண்மை கிடைக்கும் வரையிலும் காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை கண்டுபிடிக்கும் வரையிலும் இந்த போராட்டத்தை தொடர்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.



