தேயிலை ஏற்றுமதி மூலம் ஈரானுக்கான கடனை செலுத்தும் இலங்கை
ஈரானுக்குச் (Iran) செலுத்த வேண்டிய எண்ணெய்க்கான கடனில் இதுவரை 60 மில்லியன் அமெரிக்க டொலர் தேயிலை ஏற்றுமதியின் ஊடாக செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை (Sri Lanka Tea Board) தெரிவித்துள்ளது.
இந்த கடன் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி முதல் செலுத்தப்பட்டு வருவதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் (Niraj De Mel) குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் நேற்று (15) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்த கடன் செலுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அந்த உடன்படிக்கையின் கீழ், தேயிலை ஏற்றுமதியின் மூலம் கனியவளத்துறைக்காக ஈரானுக்குச் செலுத்த வேண்டிய 251 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த எதிர்பார்க்கப்படுகின்றதாக தெரிவித்தார்.
இலங்கை தேயிலை சபை
2024ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில், 4.1 மில்லியன் கிலோ தேயிலை ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
இது 2023ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் அளவை விட மூன்று மடங்கு அதிகமாகும் என இலங்கை தேயிலை சபையின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
